

பொதுவாக எல்லோருக்குமே kabab மிகவும் பிடிக்கும். இந்த குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு இன்னும் நன்றாகவே இருக்கும். அந்த கபாபையே இன்னும் கொஞ்சம் ஹெல்தியா செய்தால் கேட்கவே வேண்டாம், எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள். (Healthy Millet Kebab - Dosa) வாங்க, மில்லட்ஸ் மாவில் kabab எப்படி செய்கிறதென்று பார்க்கலாம்.
மில்லட் கபாப்
செய்முறை:
முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அதில் கடுகு சீரகத்தை போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம்,கேரட், குடை மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை போடவும். உங்களிடம் முட்டை கோஸ் மற்றும் காளி ஃபளவர் இருந்தால் சிறிதளவு அவற்றையும் நறுக்கி போடவும்.
ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சை பட்டாணியை போடவும். காய் மற்றும் மாவிற்கும் சேர்த்து தேவையான அளவு உப்பை போடவும். மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக வதக்கவும். காய்கறிகள் நன்றாக வதங்கிய பிறகு ராகி மாவையோ அல்லது கம்பு மாவையோ அல்லது கொள்ளு மாவையோ சேர்க்கவும். இல்லை என்றால் எல்லாவற்றையும் கலந்தும் சேர்த்துக்கொள்ளலாம்.
மாவை பச்சை வாசனை போகும் அளவிற்கு காயோடு சேர்த்து வதக்கவும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும். அவ்வப்போது சிறிது சிறிதாக தண்ணீரை சேர்த்து நன்றாக கிளறவும். தண்ணீரை ஒரே நேரத்தில் அதிகமாக ஊற்றாதீர்கள். அப்படி ஊற்றினால் மாவு கைகளில் ஒட்டிக்கொள்ளும் ஆகவே சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு நன்றாக உருண்டு வரும்போது கடைசியாக சிறிதளவு கரம் மசாலா தூளையும் சேர்த்து கிளறவும். அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது ஆறிய பிறகு இந்த மாவை கைகளில் வைத்து ஆமை வடையை போன்று தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும் உங்களுடைய சுவையான மில்லட்ஸ் கபாப் ரெடி.. அப்படி உங்களுக்கு வட்ட வடிவில் வேண்டாம் என்றால் ஓவல் ஷேப்பில் செய்து பொரித்து எடுத்தால் கட்லட் ரெடி.. இதற்கு தொட்டுக்கொள்ள தனியா சட்னியோ அல்லது புதினா சட்னியோ அல்லது டொமேட்டோ கெட்சப் இருந்தாலே போதும்.
மீந்துபோன சாதத்தில் சுவையான தோசை எப்படி செய்யலாம் பார்க்கலாமா..
செய்முறை:
சில நேரங்களில் மதிய உணவிற்கு செய்த சாதம் அதிகமாக மீந்து விடும். டென்ஷன் வேண்டாம்... அந்த சாதத்தை வேறு வழியில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். எல்லோரும் சாப்பிட்ட பிறகு சாதம் அதிகமாக மீந்துவிட்டால் டென்ஷன் வேண்டாம். மதியம் சாப்பிட்டு முடித்த கையோடு அரை கப் உளுத்தம் பருப்பு ஒரு கப் பச்சரிசி கால் கப் துவரம் பருப்பு மற்றும் 10 அல்லது 15 மிளகை போட்டு ஊறவைக்கவும். இரண்டு மணிநேரம் ஊறினாலே போதுமானது.பிறகு அதை மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக அரைத்துக்கொள்ளவும்.
இதற்குப் பிறகு மீந்து போன சாதத்தையும் போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த சாதத்தையும் அந்த மாவோடு கலக்கவும். தேவையான அளவு உப்பையும் போடவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்துவிடவும். இரவு சாப்பிடும்போது சுட சுட தோசை செய்தால் மிக அருமையாக இருக்கும்.
புழுங்கலரிசி சாதமாக இருந்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். இதற்கு தொட்டு கொள்வதற்கு ஏதாவது ஒரு சட்னி இருந்தாலே போதுமானது. ஆகவே சாதம் மீந்துவிட்டது, மறுபடியும் இரவு யாரும் சாப்பிடமாட்டார்களே என்ற டென்ஷனே இனி வேண்டாம். அந்த சாதத்தையும் தோசையாக மாற்றிவிடுங்கள்! சிம்பிள்!