

காலையில் சத்தான டிபன் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ரவை கார பணியாரமும், முருங்கைக் கீரை சட்னியும் சூப்பரான உணவாகும். வாங்க இன்று இந்த இரண்டு ரெசிபியையும் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ரவை கார பணியாரம்
தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்
புளித்த தயிர் - 1/2 கப்
வெங்காயம் பெரியது - 1
கேரட் - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா அரை டீஸ்பூன்
செய்முறை:
* ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
* ரவை ஆறியதும் அதில் தயிர், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து 15 நிமிடம் மூடி வைக்கவும்.15 கழித்து பார்த்தால் ரவை நன்றாக ஊறி திக்கான பதத்தில் இருக்கும். மீண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பணியார மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து இதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர், அதில் வெங்காயம், கேரட், ப,மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்க மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
* அடுத்து பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், குழிகளில் எண்ணெய் ஊற்றி, மாவை ஊற்றி இருபுறமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்.
* இப்போது சூப்பரான ரவை கார பணியாரம் ரெடி.
முருங்ககை கீரை சட்னி
முருங்கை கீரையில் பொரியல், கூட்டு, குழம்பு, அடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று முருங்கை கீரையில் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க... அப்புறம் இப்படி மட்டும் தான் செஞ்சி சாப்பிடுவீங்க...
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை - 2 கைப்பிடி
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
ப.மிளகாய் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
* முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* ஒரு இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைத்து அதன் மேல் முருங்கை கீரையைஒரு கிண்ணத்தில் வைத்து, தக்காளி, பூண்டு, ப.மிளகாய், புளி வைத்து மூடி வைத்து 6 முதல் 7 நிமிடங்கள் வேக வைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
* மிக்சி ஜாரில் வறுத்த கடலை பருப்பு, உளுத்தம் பருப்பை போட்டு அதனுடன் வேக வைத்த முருங்கை கீரை கலவையை போட்டு நைசாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளவும். மிக்சி ஜாரில் சிறிது தண்ணீர் ஊற்றி அலசி முருங்கைக் கீரை கலவையில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சட்னி பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
* இப்போது சூப்பரான முருங்கை கீரை சட்னி ரெடி.
முருங்கைக் கீரையை எண்ணெய் வதக்கியும் சட்னி செய்யலாம். ஆனால் அப்படி செய்யும் போது முருங்கை கீரையில் உள்ள வைட்டமின்களின் சத்து குறைந்துவிடும் என்பதால் வேகவைத்து செய்வது நல்லது. வேகவைத்து செய்யும்போது சத்துக்கள் குறையாமல் அனைத்தும் அப்படியே இருக்கும்.