சாதாரண ஊறுகாயை ஓரம் கட்டுங்க... குடலுக்கு நன்மை செய்யும் மூங்கில் குருத்து ஊறுகாய் செய்முறை இதோ!

bamboo-shoot-pickle
bamboo-shoot-pickle
Updated on

தயிர் சாதம் முதல் சாம்பார் சாதம் வரை தொட்டுக்கொள்ள காரசாரமாக ஒரு ஊறுகாய் இருந்தால் ஒரு தட்டு சோற்றை நாமே அறியாமல் முழுமையாக ருசித்து சாப்பிட்டு விடுவோம். ஆனால், வழக்கமாக நாம் கடைகளில் வாங்கி சாப்பிடும் மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களில் அதிக அளவிலான எண்ணெயும் உப்பும் சேர்க்கப்படுவதால், அது பல நேரங்களில் நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். இதற்கு ஒரு அட்டகாசமான மாற்று வழிதான் நொதிக்க வைக்கப்பட்ட மூங்கில் குருத்து ஊறுகாய். 

நமது ஊரில் பலருக்கும் இது சற்று புதிதாக இருக்கலாம், ஆனால் இது சுவைக்கு சுவையும் கொடுக்கும், அதே நேரம் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இதில் குடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், சாப்பிடுவதற்கு மிகவும் லேசாக இருக்கும். இப்படிப்பட்ட அருமையான ப்ரோபயாடிக் ஊறுகாயை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • மூங்கில் குருத்து - இரண்டு கப் 

  • உப்பு - 2 ஸ்பூன்

  • நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

  • கடுகு - 1 ஸ்பூன்

  • வெந்தயம் - ½ ஸ்பூன்

  • மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

  • எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை!

முதலில் மூங்கில் குருத்தின் கடினமான வெளிப்பகுதியை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் மென்மையான பகுதியை மட்டும் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். மூங்கிலில் உள்ள இயற்கையான கசப்புத் தன்மையை நீக்க, அதனை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சுமார் பத்து நிமிடங்கள் நன்றாக வேகவைத்து வடிகட்டி எடுக்க வேண்டும்.

வேகவைத்த இந்த துண்டுகளை ஒரு சுத்தமான காட்டன் துணியில் பரப்பி, ஈரம் முழுமையாக போகும் வரை நிழலில் உலர்த்திக் கொள்ளுங்கள். இப்போது அந்த துண்டுகளை ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதனுடன் உப்பை சேர்த்து நன்றாக குலுக்கி ஒரு மூன்று நாட்கள் அப்படியே காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். இந்த புளிக்க வைக்கும் செயல்முறையில்தான் நமது குடலுக்கு அதிக நன்மை செய்யும் ப்ரோபயாடிக் பாக்டீரியாக்கள் இயற்கையாகவே உருவாகின்றன.

இதையும் படியுங்கள்:
ஒரு தண்ணீர்க் கதை
bamboo-shoot-pickle

மூன்று நாட்கள் கழித்து, ஒரு கடாயில் கடுகு மற்றும் வெந்தயத்தை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக பொடி செய்து கொள்ளவும். அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், புளிக்க வைத்த மூங்கில் துண்டுகள், அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து சில நிமிடங்கள் மிதமான தீயில் வதக்க வேண்டும். மசாலாக்கள் எல்லாம் மூங்கிலோடு நன்றாக கலந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால் சூப்பரான ஊறுகாய் ரெடி.

ஆரோக்கியம் மற்றும் சுவை ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் வாரி வழங்கும் உணவுகள் மிகவும் குறைவு. அந்த வகையில் இந்த நொதிக்கப்பட்ட மூங்கில் குருத்து ஊறுகாய் நமது தினசரி சாப்பாட்டிற்கு ஒரு மிகச்சிறந்த துணையாக அமையும். சுடச்சுட சாதத்தில் சிறிது நெய் விட்டு இந்த ஊறுகாயை பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவை சும்மா அள்ளும். 

இதையும் படியுங்கள்:
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக அதிக அளவு வாக்குப்பதிவு..! காரணம் இதுதான்..!!
bamboo-shoot-pickle

அதிக மசாலாக்கள் இல்லாமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால், இது வயிற்றுக்கு எந்த ஒரு தொந்தரவையும் தராது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், செரிமானத்தை மேம்படுத்த விரும்புபவர்களுக்கும் இது ஒரு சூப்பரான உணவு.

logo
Kalki Online
kalkionline.com