
புட்டுகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவித சத்து நிறைந்ததாகும். ஹெல்த்தியான இரண்டு புட்டுக்களை இப்போது செய்து ருசித்து சாப்பிடலாமா..!
புரோட்டீன் சத்து நிறைந்த மூங்தால் புட்டு:
தேவை:
மூங்தால்
(பாசிப்பருப்பு ) 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் 3/4 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
முந்திரி பருப்பு 15
பாதாம் பருப்பு 10
நெய் 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன்
உப்பு சிறிது
தேங்காய் எண்ணை 2 டீஸ்பூன்
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில் அடிக்கனமான வாணலியில், பாசிப்பருப்பை போட்டு லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
ஆறியதும் தண்ணீர்விட்டு சுமார் இரண்டு மணிநேரம் ஊறவிடவும்.
பின்னர் நன்கு அலம்பி, உளுந்து அரைப்பதைப்போல, தண்ணீர் சேர்த்து பொங்க அரைக்கவும். இதில் சிறிது உப்பு போட்டு கலந்து, இட்லி தட்டில் விட்டு ஆவியில் வெந்து எடுத்துக்கொள்ளவும். ஆறியபின், கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு இட்லியை நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.
கொஞ்சம் தண்ணீரில் வெல்லத்தூள் போட்டு லேசாக சூடாக்கி எடுத்து வடிகட்டவும். இதை ஒரு பாத்திரத்தில் விட்டு கெட்டியாக பாகு காய்ச்சவும்.
முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்புக்களை ஒன்றிரண்டாக ஒடித்து நெய்யில் பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
தேங்காய்த் துருவலையும் இதே மாதிரி நெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
வாயகன்ற பாத்திரமொன்றில் உதிர்த்த பாசிப்பருப்பு இட்லியைப் போட்டு அதன் மீது கெட்டியாக காய்ச்சிய வெல்லப்பாகை விட்டு மிக்ஸ் பண்ணவும்.
பின்னர் வறுத்த முந்திரி-பாதாம் பருப்புக்கள், தேங்காய்த்துருவல், ஏலக்காய்ப் பொடி, மீதியிருக்கும் நெய் ஆகியவைகளையும் அத்துடன் சேர்த்து நன்றாக கலக்கிய பின் சாப்பிட சுவையாக இருக்கும் இந்த ப்ரோட்டின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த "மூங்தால் புட்டு".
உடல் வெயிட் குறைக்க உதவும் சத்தான கொள்ளு புட்டு:
தேவை:
கொள்ளு 1/2 கிண்ணம்
நல்ல பச்சரிசி மாவு 1 கிண்ணம்
ஃப்ரெஷ் தேங்காய்
துருவல் 1/2 கிண்ணம்
நெய் 3 டீஸ்பூன்
மஞ்சள்பொடி 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு 10
(ஒன்றிரண்டாக ஒடித்தது)
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் 5
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில் கொள்ளை சுத்தம் செய்து, ஒரு வாணலியில் போட்டு வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.
ஆறிய பின் மிக்ஸியிலிட்டு கர கரப்பாக பொடித்துக் கொள்ளவும்
அரிசிமாவையும் சூடு வரும்வரை வறுத்து கொள்ளுப் பொடியுடன் சேர்க்கவும். சிறிது உப்பு கரைத்த தண்ணீரை இந்த மாவுக்கலவையில் லேசாக தெளித்து பிசிறி ஒரு பத்து நிமிடங்களுக்கு மூடிவைக்கவும்.
பின்னர் மூடி வைத்ததை திறந்து மஞ்சள்பொடி சேர்த்து வேகவிடவும். புட்டு ரெடியாகும்.
முந்திரிப் பருப்பு மற்றும் தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
வெந்த கொள்ளுப் புட்டில், வறுத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல், நெய், எலுமிச்சைசாறு ஆகியவைகளை கலந்து, கடுகு, சீரகம், கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்துக் கொட்டி மிக்ஸ் செய்து சாப்பிட்டால் செம ருசியாக இருக்கும். சத்தான "கொள்ளுப்புட்டு", பருமனைக் குறைக்கவும் உதவும்.
புட்டுக்களை வேகவைத்து எடுக்கும் காரணம், வயிற்றிற்கு பிரச்னை ஏதும் நேராது.