வெயிட் லாஸ் செய்யணுமா? - இதோ அதிக புரதச்சத்து நிறைந்த கினோவா பாசிப்பருப்பு தோசை!

dosa-recipe-for-diet
dosa-recipe-for-diet
Updated on

வெப்பம் தகிக்கும் கோடைகாலத்தில் நம் உடல் எளிதில் சோர்வடைவதுடன், செரிமான மண்டலமும் மந்தமாக வாய்ப்புள்ளது. இக்காலகட்டத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைப்பதோடு, நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்கக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். அந்த வகையில், பாரம்பரிய பாசிப் பருப்பையும், நவீன சூப்பர் ஃபுட் (Superfood) என்று அழைக்கப்படும் கினோவாவையும் இணைத்து செய்யப்படும் இந்த தோசை ஒரு சிறந்த காலை உணவாகும்.

இது உடல் சூட்டைத் தணிப்பது மட்டுமல்லாமல், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்ற அதிக புரதச்சத்து கொண்ட ஒரு மாற்றாக அமைகிறது.

கினோவா பாசிப்பருப்பு தோசை

தேவையான பொருட்கள்:

கினோவா (Quinoa)_1 கப்

பாசிப்பருப்பு (Moong Dal)_ ½ கப்

இஞ்சி_ ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய்_ 2 

சீரகம்_ 1 டீஸ்பூன்

உப்பு_  தேவையான அளவு

பெருங்காயத்தூள்_  ஒரு சிட்டிகை

நல்லெண்ணெய் அல்லது நெய்_ தோசை ஊற்ற

இதையும் படியுங்கள்:
ருசியான சமையல்... சுலபமான வேலை: அசத்தலான 12 சமையல் குறிப்புகள்!
dosa-recipe-for-diet

செய்முறை:  

கினோவா மற்றும் பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி, தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் வரை ஊறவைக்கவும். ஊறிய பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக (தோசை மாவு பதத்திற்கு) அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை, அரைத்த உடனேயே தோசை ஊற்றலாம். (தேவைப்பட்டால் 15 நிமிடம் கழித்து செய்யலாம்).

தோசைக்கல்லைச் சூடாக்கி, ஒரு கரண்டி மாவை ஊற்றி மெல்லியதாகத் தேய்க்கவும். சுற்றிலும் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் விடவும். மிதமான தீயைக் காட்டிலும் சற்று கூடுதலான தீயில் வைத்து, ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

இந்தத் தோசையை தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். புதினா சேர்த்துக் கொள்வது கோடையில் உடலுக்கு மேலும் புத்துணர்ச்சி தரும்.

ஏன் இந்த தோசை கோடைக்காலத்திற்குச் சிறந்தது?

பாசிப்பருப்பு  மற்ற பருப்புகளைவிட  உடலுக்கு மிகச் சிறந்த குளிர்ச்சியைத்தரும். தோசை சுட நல்லெண்ணெய் பயன்படுத்தினால் அது உடல் சூட்டை மேலும் குறைக்க உதவும். கினோவா மற்றும் பாசிப்பருப்பு ஆகிய இரண்டிலுமே அதிக புரதம் இருப்பதால், காலை உணவிற்குப் பின் நீண்ட நேரம் பசி எடுக்காமல் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவின் தரத்தைப் பொறுத்தது. அரிசிமாவிற்குப் பதிலாக கினோவாவையும், குளிர்ச்சிதரும் பாசிப்பருப்பையும் பயன்படுத்துவதன் மூலம் சுவையும் சத்தும் நிறைந்த ஒரு சமச்சீர் உணவை நாம் பெறுகிறோம். கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய இந்த எளிமையான உணவை உங்கள் தினசரி உணவுப்பட்டியலில் சேர்த்துக்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குப் பெரும் பலன் அளிக்கும்.

ஆரோக்கியமான உணவு முறையே ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை என்பதை உணர்ந்து இதுபோன்ற சத்தான உணவுகளைத் தயாரித்து மகிழுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com