

வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து, அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் பால் சேர்த்துப்பாருங்களேன். ஆப்பம் மென்மை மிகுந்து இருக்கும்.
கீரைகளை சமைக்கும்போது இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்தால் கீரையின் பச்சை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
சப்பாத்தி மாவில் கொஞ்சம் மாங்காய்த்துருவலையும் சேர்த்துப் பிசைந்து செய்தால் சப்பாத்தி சுவை மிகுந்து இருக்கும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை வகைகளை உடனே ஆய்ந்து காற்று வெளிச்சத்தில் பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை அவை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
பூசணிக்காய் கூட்டு செய்யும்போது வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து சேர்த்தால் கூட்டின் சுவையே அலாதிதான்.
தோசை மாவில் நூடுல்ஸை ஒடித்துப்போட்டுக் கலந்து சுவையான நூடுல்ஸ் தோசை செய்யலாம். வீட்டில் உள்ள குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
பார்லியை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் ரவை போல
அரைத்து வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது சிறிது வேகவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும். பார்லியும் வீணாகாது.
பால் சேர்த்து செய்யும் பாயசம் திக்காக இருக்க பாலை அப்படியே சேர்க்காமல் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி நுரையுடன் சேருங்கள். பாயசம் திக்காக இருக்கும்.
முறுக்குமாவு கெட்டியாகி பிழிய வராமல் இருந்தால் கொஞ்சம் தேங்காய்ப்பாலைச் சேர்த்துப் பிசைந்து முறுக்கு பிழியுங்கள்.சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
ஸ்வீட் செய்யும்போது பால், சர்க்கரை என்று தனித்தனியாக சேர்க்க நேரமில்லை எனில் கொஞ்சம் மில்க் மெய்டு சேர்த்தால் போதும். செய்யும் ஸ்வீட் சுவையாக இருக்கும்.
தோசை மாவில் உப்பு அதிகமாகிவிட்டதா? கவலை வேண்டாம்.இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் மைய அரைத்து மாவில் சேர்த்துவிட்டால் உப்பு சரியாகிவிடும்.