
இந்த கோடையில் ராகி சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும், செரிமானம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மற்றும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற தாதுக்கள் கிடைக்கும். இது எடை இழப்பை ஊக்குவிக்கிறது, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
ராகியில் கூழ் செய்தும் குடிக்கலாம். அது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். தோசை செய்தும் சாப்பிடலாம். இப்போது ராகி முத்தே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ராகி முத்தே (Ragi mudde) ரெசிபி:
முதலில் ஒரு கப் ராகிமாவை எடுத்துக்கொள்ளவும். பிறகு இரண்டு ஸ்பூன் ராகி மாவை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டிதட்டாமல் கலக்கி வைக்கவும்.
அடுப்பை மூட்டி வாணலியை வைத்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக கொதி வந்த பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்க்கவும். கிண்ணத்தில் கரைத்து வைத்துள்ள ராகிமாவு கரைசலையும் சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு கலக்கவும்.
இப்போது எடுத்து வைத்துள்ள ஒரு கப் ராகி மாவை மெதுவாக கொட்டி கிளறவும். தீயை மிதமான நிலையில் வைத்து கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு நன்றாக வெந்து கட்டியாகும்வரை கிளறவும். அடிபிடிக்காத படிக்கு பார்த்துகொள்ளவும். மாவில் கை தொட்டால் ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
சிறிது ஆறிய பிறகு கைகளில் எண்ணெய் அல்லது நெய்யை தடவிக்கொண்டு பெரிய பெரிய உருண்டைகளாக(பொரி உருண்டை அளவிற்கு) பிடிக்கவும். ராகி முத்தே தயாராகி விட்டது.
இத்துடன் செனா மசாலா அல்லது சால்னா அல்லது எதாவது ஒரு க்ரேவி ஸப்ஜி செய்து சாப்பிடவும். ராகி முத்தேவுடன் இது போன்ற ஸைடிஷோடு சேர்த்து சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும்.
மக்கானா சப்பாத்தி ரெசிபி:
முதலில் ஒரு கப் மக்கானாவை வாணலியில் போட்டு இரண்டு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி நன்றாக crispy ஆக வறுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் கோதுமை மாவு, அரைத்த மக்கானா மாவு, உப்பு, ½ ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் ½ ஸ்பூன் சீரகத் தூள் இவை எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் கலந்து நன்றாக சப்பாத்தி மாவை பிசையவும். அரைமணி நேரத்திற்கு மாவை ஊறவிடவும்.
பிறகு சப்பாத்திகளாக இட்டு தோசைக் கல்லில் போட்டு இரு பக்கமும் எண்ணெய் தடவி பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால் சுவையான மக்கானா சப்பாத்தி ரெடி... விருப்பமுள்ளவர்கள் நெய் தடவியும் வேக வைக்கலாம். தொட்டு கொள்வதற்கு உங்கள் இஷ்டம் போல் எதை வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.