
மாம்பழம் மற்றும் மாங்காய் சீசன் துவங்கிவிட்டது. மாம்பழம் ஒருவித சத்துக்கள் கொண்டது எனினும் பச்சை மாங்காய் அதனினும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகை ஊட்டச்சத்துக்களின் கலவையாக இருக்கிறது. விட்டமின் சி நிறைந்த மாங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நோயெதிர்ப்பு சக்தி பெருகும். காஸ்ட்ரோ பாதுகாப்புடன் கொலாஜன் உற்பத்தியை தூண்டும் தன்மை கொண்டது மாங்காய்.
மேலும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் கொண்டது. இத்தனை நல்ல குணங்கள் கொண்ட மாங்காயில் பருப்பு சாம்பாரும், ரசமும், பொடியும் செய்து ருசிப்போமா?
பாசிப்பருப்பு மாங்காய் சாம்பார்
தேவை:
பச்சை மாங்காய் துருவல் - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை பெருங்காயத்தூள்- சிறிது
சாம்பார்த்தூள்- 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு பச்சை மிளகாய்- 3
எண்ணெய் அல்லது நெய்- 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை:
துவரம் பருப்பு , பாசிப்பருப்பு இரண்டையும் கழுவி மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு குக்கரில் வேகவைத்து எடுத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய் அல்லது நெய்விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து அதனுடன் மாங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். அதனுடன் பருப்பு கடைசல் சேர்த்து சாம்பார் தூள் கலந்து ஒரு கொதி வந்ததும் பெருங்காயத்தூள் உப்பு சேர்த்துக் கலந்து நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சோற்றுக்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி வகைகளுக்கும் இதை தொட்டுக் கொள்ளலாம்.
மாங்காய் ரசம்
தேவை:
நறுக்கிய பச்சை மாங்காய் துண்டுகள் - 1 கப்
பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் , பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
ரசப்பொடி - 1/2:ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
கொத்தமல்லித்தழை- சிறிது
நெய்- 1 ஸ்பூன்
கடுகு - தாளிக்க
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பருப்புடன் மஞ்சள் தூள் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவைத்து மசிக்கவும். இதனுடன் மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். இப்போது மாங்காய்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி அதில் சேர்க்கவும். அத்துடன் மாங்காய் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும். ரசம் பொங்கி வரும்போது ரசப்பொடி சேர்த்து மல்லித்தழை நெய்யில் தாளித்த கடுகு பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும். மாங்காய் மணத்துடன் இந்த ரசம் வாய் கசப்பு அகற்றி செரிமானம் தரும்.
(ஆம்சூர்) மாங்காய் பவுடர்
தேவை:
புளிப்பான மாங்காய் - 4
கருப்பு உப்பு - 1/4 கப்
செய்முறை:
மாங்காயை நீரில் சிறிது நேரம் ஊறவைத்து நன்றாக கழுவி துணியால் துடைக்கவும். தோலுடனே நீளத்துண்டுகளாக்கி வெயிலில் ஐந்து அல்லது ஆறுநாட்கள் பிரட்டிகா காயவைத்து எடுத்தால் கைகளால் உடைக்கும் பதத்தில் வந்துவிடும்.
பின்னர் அதை மிக்ஸியில் போட்டு கருப்பு உப்பு சேர்த்து நைசாக அரைத்து நன்றாக சலித்து காற்று புகாத பாட்டிலில் நிரப்பி மூடிவைக்கவும். இந்த ஆம்சூர் பொடியானது ஒரு வருடம்வரை கூட கெடாமல் இருக்கும். சாட் வகைகளுக்கும் புளிப்பு சேர்க்கும் குழம்பு வகையறா சமையலுக்கும் உபயோகிக்கலாம்.