
சுண்டல், கடலை பயறுவகைகளை (healthy recipes) வேகவைக்கும்போது சிறிதளவு இஞ்சியை தோல் சீவி தட்டிச்சேர்த்தால் மணமாக இருக்கும்.
ரசம் தயாரிக்கும்போது தக்காளியை முதலிலேயே சேர்ப்பதைத் தவிர்த்து, தக்காளியைத் துண்டுகளாக்கி, நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு, ரசம் தயாரித்து முடித்ததும் சேர்த்துவிட்டால் ரசம் தெளிவாகவும், சுவையாகவும் இருக்கும்.
வெஜிடபிள் குருமா தயாரிக்கும்போது அளவுக்கேற்ப ஒரு கப் கட்டித்தயிர் சேர்த்துப் பாருங்கள். குருமா சுவையாக இருக்கும்.
உப்புமா செய்யும்போது, ரவை வெந்து வரும் நேரத்தில் தேங்காய்த்துருவல் சேர்த்துக்கிளறினால் உப்புமா சுவை பிரமாதமாக இருக்கும்.
எந்த வகை காரக்குழம்பு செய்யும் போதும், இறக்கும்முன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயும் சிறிதளவு வெல்லத்தூளையும் சேர்த்தால் காரக்குழம்பு சுவையோ சுவை.
சாம்பார் செய்யப்போறீங்களா? கொஞ்சம் மல்லித்தழையை பொடியாக நறுக்கி சாம்பாரில் சேர்த்துப் பாருங்கள். சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும்.
பாயசத்தில் முந்திரியை வறுத்துப் போடும்போது சிலசமயம் கருகிவிடும். அதற்கு பதிலாக ஒரு கரண்டி பாயசத்தை எடுத்து அதில் முந்திரியை உடைத்துப்போட்டு மிக்ஸியில் அரைத்து பாயசத்தில் சேர்த்துவிட்டால் சுவை கூடும்.
தேங்காய் அரைத்து செய்யும் குழம்பு வகைகளுக்கு தேங்காயைத் துருவி சூடான எண்ணெயில் சிறிது வதக்கி எடுத்து அரைத்து குழம்பில் ஊற்றினால் குழம்பு சுவை மிகுந்து இருக்கும்.
பிரட்டில் சாஸ் சேர்த்து இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவிக்கொள்ளவும். இதில் நறுக்கி வைத்த தக்காளி, வெங்காயம், முட்டைக்கோஸ், மிளகாய் சேர்த்து சுவையான சாண்ட்விச் தயார் செய்யலாம்.
அவியல் செய்யும்போது வேகவைக்கும் காய்களில் ஒரு கப் அளவுக்கு தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். முருங்கைக்காயைத்தவிர்க்கவும். ஒரு கப் காய்களில்
தேவையான உப்பு, காரம் சேருங்கள். பிறகு காய்களை கையால் மசித்துஉருண்டைகளாக்குங்கள். கடலைமாவில் உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்துக் கரைத்துக்கொண்டு, அதில் காய்கறி உருண்டைகளை முக்கி சுவையான வெஜிடபிள் போண்டாக்களாக பொரித்தெடுக்கலாம்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றிச்செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் சமயத்தில் சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.