
சிறுதானிய உணவுகளில் Proso Millet என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பணிவரகுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. காரணம் இதில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த பயிர் வளர்வதற்கு அதிக மெனக்கிட வேண்டாம். குளிர் காலங்களில் கூட அதிகாலையில் பெய்யும் பனியிலேயே இதன் வளர்ச்சி இருக்கும் என்பதால்தான் இதற்கு பனி வரகு என்ற பெயர் வந்துள்ளது. இதை உணவில் எடுக்கும்போது சருமம் பளபளப்பு, இளநரை, முதுமை தோற்றம், நீரிழிவு, கல்லீரல் கற்கள் போன்ற பல பாதிப்புகளுக்கு தீர்வாகிறது எனப்படுகிறது. இந்தப் பனி வரகு சமையலில் இரண்டு ரெசிபிகள் உங்களுக்காக..
பனிவரகு அடை தோசை
தேவையானவை:
பனிவரகு- 1 கப்
உளுத்தம் பருப்பு- 1/4 கப்
வெந்தயம்- 4 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
வற்றல் மிளகாய்- 4
உப்பு - தேவைக்கு
தேங்காய் துருவல் -2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
பனிவரகு, உளுந்து, வெந்தயம் மற்றும் துவரம் பருப்பு மூன்றையும் கழுவி சில மணிநேரம் ஊறவிடவும். பிறகு அதில் வற்றல் மிளகாய் சேர்த்து அரை பதத்தில் கொரகொரப்பாக அரைத்து கடைசியாக தேங்காய் துருவல் நசுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து எடுத்து உப்பு போட்டு நன்கு கலக்கி வைக்கவும். இது இரண்டு மணிநேரம் புளித்தால் போதும்.
இதில் தாளிப்பு தேவை என்றால் ஒரு கரண்டியில் நல்லெண்ணெய ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து இதில் சேர்க்கலாம். அடுப்பில் தவா வைத்து அடை தோசையாக ஊற்றி சுற்றிலும் வெண்ணைய் அல்லது எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து கெட்டியான தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
பனிவரகு நட்ஸ் பாயசம்
தேவையானவை;
பனிவரகு- 1 கப்
வறுத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய் பால் - 1 கப் ( கெட்டிப்பால்)
அடுத்து எடுத்த தேங்காய் பால்- 1 கப்
ஏலக்காய் சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி, பாதாம், அக்ரூட், பிஸ்தா - தலா 5
திராட்சை - 10
பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை;
பனிவரகு வறுத்த பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி பாலை தவிர்த்து அடுத்ததாக எடுத்த தேங்காய் பால் ஊற்றி மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேகவிடவும். வெந்ததும் அதனுடன் வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து வடிகட்டி எடுத்த வெல்லக் கரைசல் மற்றும் ஏலக்காய் தூள், சுக்கு பொடி, துருவிய பருப்பு வகைகள், நெய்யில் வறுத்த திராட்சை, தேங்காய் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
நன்கு கிளறி சற்று கெட்டியானதும் முதல் தேங்காய் பாலை சேர்த்து கிளறி குளிர்ச்சியாக பரிமாறலாம்.