
1) முள்ளு முருங்கை இலை அடை:
ஆரோக்கியமான உணவான இது சளி, மாதவிடாய் தொந்தரவுகள் மற்றும் தாய்ப்பால் சுரப்பிற்கு மிகவும் உதவும்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி- ஒரு கப்
கடலைப்பருப்பு- கால் கப்
உளுத்தம் பருப்பு- கால் கப்
கல்யாண முருங்கை இலை- 1 கட்டு
மிளகாய்- 2
மிளகு- 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
வெங்காயம்- 1
உப்பு- தேவையானது
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, நல்லெண்ணெய் சிறிது
செய்முறை
முள்ளு முருங்கை அல்லது கல்யாண முருங்கை இலையை நன்கு சுத்தம் செய்து நடுவில் உள்ள நரம்பை எடுத்துவிட்டு நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைத்து களைந்து அரைக்கவும். பாதி அரைந்ததும் நறுக்கி வைத்துள்ள கல்யாண முருங்கை இலை, காய்ந்த மிளகாய், உப்பு, மிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, தாளித்தவற்றை கொட்டி நன்கு கலந்து சிறிது தடிமனான அடைகளாக வார்த்தெடுக்கவும். தொட்டுக்கொள்ள வெல்லம், வெண்ணெய், தேங்காய் சட்னி போன்றவை பொருத்தமாக இருக்கும்.