
பீட்ரூட் சட்னி (இனிப்பு)
தேவை:
எண்ணெய் - 3 டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு - தலா அரை கப்
பூண்டு - 6 பல்
வர மிளகாய் - 3
பீட்ரூட் நறுக்கியது - ஒரு கப் புளி - ஒரு துண்டு
கடுகு - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடபலை பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, பொடியாக நறுக்கிய பீட்ரூட், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பீட்ரூட்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். பின்னர், மிக்ஸி ஜாரில் பீட்ரூட் கலவையை கொட்டி, அத்துடன் புளி, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பீட்ரூட் கலவையுடன் சேர்த்து கலக்கவும்... இனிப்பு சுவை மிக்க பீட்ரூட் சட்னி ரெடி.
*****
வேப்பம் பூ சட்னி (கசப்பு)
தேவை:
வேப்பம் பூ - 2 கப் ,
பச்சை சுண்டைக்காய் - 1 கப், கடலைப் பருப்பு - அரை கப், நல்லெண்ணெய் - 2 ஸ்பூன், வற மிளகாய் - 3,
புளி - சிறிது
பெருங்காயம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு, புளி, வேப்பம் பூ, பச்சை சுண்டைக்காய், வற மிளகாய், உப்பு ஆகியவற்றைப் போட்டு வதக்கி, ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும். மற்றொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, அரைத்து வைத்த கலவையைப் போட்டு, நன்கு வதக்கி இறக்கவும். சுவையான, ஆரோக்கியமான வேப சட்னி தயார்..
****
மாங்காய் சட்னி (புளிப்பு)
தேவை:
புளிப்பான கிளிமூக்கு மாங்காய் துருவல் - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
மாங்காய் துருவலுடன் பச்சை மிளகாய், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைக்கவும். இதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இறக்கினால், புளிப்பு சுவை மிக்க மாங்காய் சட்னி தயார்.
******
நெல்லிக்காய் சட்னி (துவர்ப்பு)
தேவை:
பெரிய நெல்லிக்காய் - 4
மிளகாய் வற்றல் - 5
உளுந்து - 6 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - சிறிது
செய்முறை:
நெல்லிக்காயை விதை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.இட்லி பாத்திரத்தில் விதை நீக்கின நெல்லிக்காயை வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து எடுக்கவும்
மிக்ஸியில் வறுத்தவற்றை போட்டு சிறிது தேங்காய், புளி, உப்பு, நெல்லிக்காய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியான சட்னியாக அரைத்து எடுக்கவும்.
சுவையான நெல்லிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசையுடனும் சாப்பிடலாம், சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
*****
முள்ளங்கி சட்னி (உவர்ப்பு)
தேவை:
முள்ளங்கி - 1
பெரிய வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 1 கப்
புளி - கோலி குண்டு அளவு
இஞ்சி - சிறிது
பூண்டு - 4 பல்
தாளிக்க - எண்ணெய்,
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
மல்லி விதை - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
கடுகு - சிறிது
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், முள்ளங்கியையும் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிறிது உப்பு சேர்த்து முள்ளங்கியை வதக்கவும். பின் தாளிக்க கொடுத்தவற்றை ஒன்றன் பின் ஓன்றாக போட்டு தாளிக்கவும்.பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து ஒன்று சேர வதக்கவும்.
ஆறியதும் தேங்காய், இஞ்சி, பூண்டு மற்றும் புளி சேர்த்து சிறிது நீர் விட்டு அரைக்கவும்.கடைசியாக சட்னியில், கடுகு மற்றும் கறிவேப்பிலையை நல்லெண்ணெயில் தாளித்து ஊற்றவும்.
சுவையான, உவர்ப்பு சுவை மிக்க முள்ளங்கி சட்னி ரெடி. சுடு சாதத்திற்கு ஏற்றது இது.
******
கருப்பு உளுந்து கார சட்னி (காரம்)
தேவை:
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 3
உடைத்த கருப்பு உளுந்து - கால் கஞ
கட்டி பெருங்காயம் - சிறிய துண்டு
வர மிளகாய் - 8
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும். தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் 1/2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கருப்பு உளுத்தம்பருப்பை சேர்த்து நன்கு சிவந்து வாசம் வரும் வரை வறுக்கவும். பின் ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும். பின் மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயத்தை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயத்தை சேர்த்து மிதமான சூட்டில் சிவந்து வரும் வரை வதக்கவும். பின் தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளி சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். தக்காளி நன்கு குழைத்து வதங்கியதும், ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் கல் உப்பு, வறுத்த மிளகாய் வற்றல் மற்றும் வதக்கிய சின்ன வெங்காயம, வதக்கிய தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
கடைசியாக வறுத்து வைத்துள்ள பெருங்காயம் மற்றும் கருப்பு உளுந்தை சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். காரசாரமான கறுப்பு உளுந்து சட்னி தயார்.