
விதம் விதமா கலந்த சாதம் செய்யலாம் வாங்க...
1. எலுமிச்சை சாதம் சூப்பர் சுவையில் இருக்க, சிறிது தனியா, காயவைத்த இரண்டு மிளகாயை எண்ணெய் விட்டு வறுத்துப் பொடி செய்து சேர்த்துக் கிளறவும். சாதம் தனியாபொடியில் ஊறி, ருசி அபாரமாக இருப்பதுடன், வித்தியாசமாகவும், நல்ல காரமாகவும் இருக்கும்.
2. தேங்காய் சாதம் செய்யப் போகிறீர்களா? முதலில் வெறும் வாணலியில், இரண்டு, மூன்று டீஸ்பூன் வெள்ளை எள்ளை வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். சாதம் கலந்து முடித்ததும், கடைசியில் பொடித்து வைத்துள்ள எள்ளை தூவி விட்டால் சுவை அருமையாக இருக்கும்.
3. கருவேப்பிலை சாதம் செய்யும் போது, வடித்த சாதத்தை இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு உதிர் உதிராக்கவும். கொஞ்சம் இளம் துளிர் கருவேப்பிலை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது மிளகு, சிறிது சீரகம், தேவையான உப்புடன், நீர் விடாது கெட்டியாக கரைத்து சாதத்தில் கலக்கவும்.
4. கலந்த சாத வகைகள் பரிமாறும் போது, மேலே ஓமப்பொடி, காரா பூந்தி, மிக்ஸர் போன்ற எதாவது ஒன்றைத்தூவி பரிமாறினால் அந்த சாதத்தின் கரகரப்பு கூடி, சாப்பிட சுவையாக இருக்கும்.
5. புளியோதரை, கறிவேப்பிலை சாதம், புதினா சாதம் போன்றவற்றுக்கு எள்ளுப்பொடியைத் தூவினால் சுவையாக இருக்கும்.
6. ஒரு டேபிள்ஸ்பூன் தனியா, ஆறு மிளகு, இவற்றை அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்துப் பொடி செய்து, புளிக்காய்ச்சலில் சேர்க்காமல், தனியாக சாதம் பிசையும்போது, தேவையான அளவு சேர்த்துக்கலந்து பிசைந்தால் ருசியான பெருமாள் கோவில் புளியோதரை தயார்.
7. தக்காளியை வதக்கி மிக்ஸியில் அரைத்து, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம், சிறிது வறுத்த கடலைப் பருப்பு சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியானதும் பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இதை சாதத்தில் கலந்து பிசைந்தால் சுவையான தக்காளி சாதம் தயார்.
8. தேங்காய் உடைத்த இளநீரை ஊற்றி தயிர்சாதம் செய்தால் தயிர் சாதததுக்கு டேஸ்ட் அதிகமாயிருக்கும்
9. கலவை சாதம் செய்யும்போது ஒரு டீஸ்பூன் வெண்ணைய் சேர்த்துக் கலக்கவும். சாதம் பொலபொல வென்று உதிரியாகவும், சுவை யாகவும் இருக்கும்.
10. புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, மற்றும் வறுத்த கடலையை சேர்த்துப் பாருங்கள். புளியோதரை சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.
11. எலுமிச்சை சாதம் தயாரிக்கும் போது, சிறிதளவு வெந்தயத்தை வறுத்துப்பொடி செய்து கலந்து கொண்டால் சாதம் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
12. தக்காளி சாதத்தில் சிறிதளவு வெந்தயம், ஒரு துண்டு மஞ்சள், ஒரு துண்டு பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் போடலாம். பூண்டுப் பல்லையும் எண்ணையில் வதக்கி அரைத்துச் சேர்க்கலாம். தக்காளி சாதம் சூப்பர் ருசியில் இருக்கும்.