
உறவுகள் என்பது குடும்ப உறவுகள், நட்புறவுகள், தொழில் ரீதியான உறவுகள் என பல வகைகளில் உள்ளன. உறவுகள் ஏன் முக்கியமானது தெரியுமா? உறவுகள் தனிப்பட்ட மனிதனின் மனதை மகிழ்ச்சியடையவும், நிம்மதியடையவும் செய்வதுடன் தனிமை உணர்வை போக்கவும் உதவுகிறது. உறவுகள் மூலம் நம்பிக்கை, புரிதல், ஆதரவு போன்ற அருமையான விஷயங்கள் கிடைக்கின்றன. இதனால் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களை எளிதாக சமாளிக்க முடிகிறது.
உறவின் ஆழம் அதிகரிக்க உறவுகளின் மீது நேர்மை, அன்பு மற்றும் மரியாதை செலுத்துவது உறவுகளை வலுவாக வைத்திருக்க உதவும். உறவுகள் சில நேரங்களில் சிக்கல்களையும் சவால்களையும் கொண்டு வரலாம். ஆனால் அவற்றை சமாளிக்கும் திறனையும் பெற்று விடுவது சிறப்பானதாகும்.
உறவின் ஆழம் அதிகரிக்க வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் மிகவும் அவசியம். ஒருவருக்கு ஒருவர் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பகிர்ந்து கொள்வதுடன், ஒருவரையொருவர் புரிந்து கொள்வதும், நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம். முக்கியமாக ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுக் கொள்வதும், உணர்வுகளை புரிந்துகொள்ளவும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பதும் உறவின் ஆழத்தை அதிகரிக்கும்.
உறவில் சிக்கல்கள் வருவது சகஜம். அவற்றை அமைதியாக நேர்மையான வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும். சண்டை என்பது உறவில் ஒரு பகுதியாக இருக்கலாமே தவிர அது எப்பொழுதும் ஒருவருக்கு ஒருவர் மதிக்கின்ற உறவை பலவீனப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. தொலைபேசியிலும், சமூக வலை தளங்களிலும் அதிக நேரத்தை செலவழிக்காமல் உறவுகளுடன் நேரத்தை செலவழிக்கும் போது நெருக்கம் இன்னும் அதிகரிக்கும். உறவுகளில் உற்சாகம் அதிகரிக்க புதுப்புது விஷயங்களில் ஈடுபடுவதும், புதிய இடங்களுக்கு செல்வதும், புதிய அனுபவங்களைப் பெறுவதும் சிறந்த பலனளிக்கும்.
உறவுகள் கசந்து விடாமல் இருக்க மற்றவர்களின் மனம் புண்படும்படி பேசாமல் இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்குமே மதிப்பும் மரியாதையும் கொடுத்தால்தான் உறவுக்குள் பிரிவு என்பது நேராது. எனவே பிறரை மரியாதைக் குறைவாக நடத்துவதோ பேசுவதோ கூடாது. உறவுகளுக்கு இடையே பொறுமையற்ற அணுகுமுறை உறவை கசந்து விடச் செய்யும். உறவுகள் கசந்துவிடாமல் இருக்க ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும், நேர்மறையாக சிந்திப்பதும், தவறு நேர்ந்தால் மன்னிப்பு கேட்பதில் தயக்கமின்றி இருப்பதும் உறவின் ஆழத்தை அதிகரிக்கும்.
உறவின் மேன்மையை தெரிந்துகொண்டு உறவை பலப்படுத்துவோம்.