
அப்பம், அதிரசம் செய்த பின் சூடாக இருக்கும்போதே வறுத்த எள், கச கசா மற்றும் கலர் கொப்பரையைத் தூவிவிட சூட்டில் அவை பிடித்துக் கொள்வதுடன் சுவையும் கூடும்.
காலையில் குருமா அல்லது குழம்பு செய்தால், அதனுடன் சிறிதளவு புளியைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் அவை இரவுவரை கெடாமல் இருக்கும்.
சுவையான மாங்காய் பச்சடி செய்யலாமா? மாங்காயை பெரிய பெரிய துண்டுகளாக போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வையுங்கள். மாங்காயின் அளவுக்கு தகுந்த மாதிரி வெல்லக்கரைசல், அரிசிமாவுக் கரைசல் விட்டு கொதிக்கவிடுங்கள். பின்னர் கடுகு, பச்சைமிளகாய் தாளியுங்கள். ருசியான மாங்காய் பச்சடி தயார்.
பொடியாக நறுக்கிய சப்பாத்தியுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சைமிளகாய், துருவிய கேரட், வெள்ளரிக்காய், கொஞ்சம் தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்துக் கலந்து சாலட் போல் பரிமாறலாம்.
காராபூந்திக்கு அரிசிமாவும், சோடா உப்பும் இன்றியமையாதவை. இவையே காரா பூந்திக்கு கரகரப்பு தரும்.
தேன்குழல் முறுக்கு போன்ற பட்சணங்கள் செய்யும்போது தேங்காய்ப் பால் சேர்த்துச் செய்தால் அலாதி சுவையுடன் இருக்கும்
பால் சேர்த்துச் செய்யும் பலகாரங்களுக்கு, பாலை நன்றாக காய்ச்சிய பிறகுதான் பயன்படுத்த வேண்டும்.
சப்பாத்தியை தேவையான அளவுக்கு கட் செய்து ஒரு பொட்டலம் போல் சுருட்டி, அதன் உள்ளே விருப்பமான மசாலா கலந்த காய்கறிக்கலவையை வைத்து ஓரங்களில் நீரில் கலந்த மைதாமாவால் ஒட்டி சூடான எண்ணையில் பொரித்து எடுத்தால் சுவையான சப்பாத்தி சமோசா ரெடி. இதை தக்காளி சாஸ், அல்லது சில்லி சாஸுடன் சாப்பிடலாம்.
இட்லியை கட்டியில்லாமல் உதிர்த்து வைக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்து, அதில் சீரகம், மிளகு, கறிவேப்பிலை, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து பரிமாறினால் ரவா பொங்கல் போல சுவையாக இருக்கும்.
ரவா உப்புமாவுடன் துருவிய கேரட், கொத்தமல்லி, சிறிதளவு அரிசிமாவு கலந்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கலாம்.
சாதத்தை மிக்ஸியில் அரைக்கவும். அதில் பெருங்காயம், பச்சை மிளகாய் விழுது, சீரகம், உப்பு போட்டு நன்கு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து காயவைத்து எடுத்தால் சூப்பர் சுவையில் வடகம் ரெடி.
முதல் நாள் செய்த சப்பாத்தி காய்ந்து போய் இருந்தால் அதை இட்லிப்பானையில் வைத்து ஆவியில் இரண்டு நிமிடங்கள் வேகவைத்தால் சாஃப்ட் ஆகிவிடும்.