
சப்பாத்தி மீந்துவிட்டதா? கவலையை விடுங்க. பத்தே நிமிடத்தில் ஆரோக்கியமான பீட்சாவாக்கி மாலை டிபனுக்கு குழந்தைகளுக்கு கொடுங்க குதூகலமாயிடுவாங்க.
ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள்:
1.மீந்து போன சப்பாத்தி 1
2.பீட்சா சாஸ் 2-3 டேபிள் ஸ்பூன்
3.ஒரெகானோ 1 டீஸ்பூன்
4.சில்லி ஃபிளேக்ஸ் 1 டீஸ்பூன்
5.கழுவி நறுக்கிய தக்காளி, வெங்காயம், குடை மிளகாய், கேரட், மக்காச் சோள மணிகள் கலந்தது.
6.துருவிய மொசரெல்லா சீஸ் ¼ கப்
7. ஆலிவ் ஆயில் 1 டீஸ்பூன்
8.கொத்தமல்லி இலைகள் ஒரு கைப் பிடி
செய்முறை:
சப்பாத்தியை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். பீட்சா சாஸை அதன் மேற்பரப்பில் முழுவதும் நன்றாக ஸ்பூனால் தடவி விடவும். அதன் மீது நறுக்கி வைத்த காய்கறி சோள மணி கலவையை நன்கு சமமாகப் பரத்தி வைக்கவும். பிறகு, காய்கறிகளை மூடும் அளவிற்கு துருவிய மொசரெல்லா சீஸ்ஸை தூவிவிடவும்.
ஒரு நான் ஸ்டிக் கடாயை (Pan) அடுப்பில் வைத்து சூடாக்கவும். பின் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்யை தடவவும். அதன் மீது சப்பாத்தி பீட்சாவை கவனமுடன் பிடித்துத் தூக்கி வைத்து ஒரு மூடியால் மூடவும்.
மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் வேகவிடவும். சீஸ் முழுவதும் உருகிவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்ட பின் அடுப்பிலிருந்து இறக்கவும். மூடியை திறந்து பீட்சா மீது ஒரெகானோ, சில்லி ஃபிளேக்ஸ், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றைத் தூவிவிடவும்.
இதேபோல் மீந்துபோன மற்ற சப்பாத்திகளையும் தயார் பண்ணி, சூடாக வெட்டி பரிமாறவும். ரசித்து ருசித்து சாப்பிட்ட பின் இரவு உணவு கூட வேண்டாமென்று சொல்லிடப் போறாங்க!