
கார அடைக்கு பச்சரிசி போடுவதுபோல, கோதுமை ரவையை மற்ற பருப்புகளுடன் ஊறவைத்து அரைத்து அடை வார்க்க மிருதுவாக இருக்கும்.
எந்த வகை காய்கறியை வேகவைக்கும் போதும் உப்பைக் கடைசியில்தான் சேர்க்கவேண்டும். அப்பொழுதுதான் காய்கறிகள் சீக்கிரமாக வேகும்.
தேங்காயைப் பல்லு பல்லாக நறுக்க தேங்காய் மூடிகளை சிறிது நேரம் நெருப்பில் காட்டவும். ஓடு தனியாகவும், தேங்காய் தனியாகவும் எளிதில் வந்துவிடும்.
வெங்காய சாம்பார் செய்யும்போது தேங்காயுடன் வெங்காயத்தை வதக்கி அரைத்து, குழம்பில் சேர்க்க, ருசியும் மணமும் கூடுதலாக இருக்கும்.
எந்த ஊறுகாய் செய்தாலும் கல் உப்பை நன்கு வறுத்துப் பொடி செய்து ஊறுகாய் செய்தால் பல மாதங்கள் ஆனாலும் கெடாது.
சமையலுக்கு இஞ்சியைப் பொடியாக கட் பண்ணுவதைத் தவிர்த்து, இஞ்சியின் தோலை நீக்கிய பின் கேரட் துருவியில் துருவி சமையலில் பயன்படுத்தினால் உணவு பதார்த்தங்களின் மணமும், சுவையும் கூடும்.
கூட்டு, குருமா போன்ற கிரேவியான அயிட்டங்களில் காரம் அதிகமாகிவிட்டால், வெண்ணெய் ஒரு ஸ்பூன் கலந்து சூடாக்கினால் காரம் குறைவதோடு மணமாகவும் இருக்கும்.
பாலை லேசாக சூடு படுத்தி, அரை ஸ்பூன் சர்க்கரையைக் கரைத்து உறை ஊற்றவும். தயிர் கெட்டியாக உறையும். புளிக்கவும் செய்யாது.
மாதுளம் பழங்களை வாங்கியதும், நான்கு துண்டாக வெட்டி ஃ ப்ரிட்ஜில் வைத்தால் வீணாகாது. முழுப்பழமாக வைத்தால் உள்ளே அழுகிப்போய்விடும்.
பதார்த்தங்கள் உள்ள கரண்டிகளை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக்கு மாற்றாதீர்கள். இதனால் சமைத்த பதார்த்தம் பல சமயம் கெட்டுவிடும்.
காய்ந்த எண்ணையை ஒரு கரண்டி பஜ்ஜி மாவில் சூடாக ஊற்றித் தோய்த்துப்போட்டால் பஜ்ஜி உப்பலாக வரும்.
உளுந்து அப்பளம் நான்கு எடுத்து, அடுப்பில் சுட்டு தூளாக்கி, அதில் தயிரை சேர்க்கவும். திடீர் தயிர் பச்சடி தயார்.