
சமையலில் பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், நோய்களை விரட்டவும் உணவுப்பொருட்கள் பயன்படும். அவை என்னவென்று பார்ப்போமா!
வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி, அத்துடன் முருங்கைக் கீரையைச் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகிவிடும்.
கல்யாண முருங்கை இலையை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துக்கொண்டால் சளி, கபம் நீங்க உதவும்.
வயிற்றுப்புண் உள்ளவர்கள் புழுங்கல் அரிசி சோற்றின் வடிகஞ்சியைக் குடித்து வர நிவாரணம் கிடைக்கும்.
ஒல்லியாக இருப்பவர்கள் பாலில் தேன் கலந்து தினமும் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் சதை போடும்.
ஆப்பிள், பீட்ரூட், கேரட் சேர்த்து செய்த ஜூஸ் அடிக்கடி பருகி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட கோளாறுகளின் தாக்கம் மட்டுப்படும்.
வாழத்தண்டு சாறு, பூசணிச்சாறு, இவற்றில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஊளைச்சதை குறையும்.
வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டுவர, இருமல், பித்தக்கோளாறு விலகிவிடும்.
உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது பனை வெல்லத்தை கரைத்து குடிப்பதன் மூலம் வயிற்றில் அமிலம் சுரப்பதை தவிர்க்கலாம்.
பனை நுங்கு நீர் எடுத்து, அதில் சம அளவு எலுமிச்சைச்சாறு கலந்து, வியர்க்குரு மீது தடவி வர வியர்க்குரு மறையும்.
வாழைப்பூவை அரைத்து சாறு எடுத்து, அச்சாற்றின் அளவு பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகமாதல், வெள்ளைப்படுதல் சரியாகிவிடும்.
வல்லாரக்கீரையை சுத்தம் செய்து, பத்து இலைகளை எடுத்து ஐந்து மிளகு சேர்த்து அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று மாத காலம் குடித்து வந்தால் தளர்வுற்ற தேகம் பலம் பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
பால் சேர்க்காத தேநீரில் கொஞ்சம் தேன்விட்டு சாப்பிட்டால், தொண்டைக்கட்டு விலகும், தொண்டைக் கரகரப்பு நீங்கும்.