
பால் பாயசம் செய்யும்போது பாலை நன்கு கொதிக்க வைத்த பிறகு சேர்க்கவும். காய்ச்சாத பாலுடன் சர்க்கரை சேரும்போது திரிந்துவிட வாய்ப்பு உண்டு.
பயணங்களுக்கு எடுத்துச்செல்லும் உருளைக்கிழங்கு மசாலா சீக்கிரம் கெட்டுவிடும். எனவே உருளைக் கிழங்கை சற்றே மெல்லியதாக நறுக்கி எண்ணையில் பொரித்து, உப்பு, காரம் தூவி எடுத்துச் சென்றால் நெடுநேரம் ஊசிப்போகாமல் இருக்கும்.
நேந்திரங்காய் சிப்ஸை உங்களுக்கு பழக்கமான எண்ணையில் பொரித்தெடுங்கள். அதை போட்டு வைத்துள்ள டப்பாவில் உப்பு, காரம் தூவுங்கள். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயைத் தடவிக்கொண்டு சிப்ஸை நன்கு பிசிறிவிட்டால் சிப்ஸ் தேங்காய் எண்ணையில் செய்தது போலவே இருக்கும்.
தோசை மாவில் உப்பு அதிகமாகிவிட்டால், ஒரு கரண்டி ரவையை வெறும் வாணலியில் வறுத்து, பாலில் ஊறவைத்து மாவில் சேர்த்து விடுங்கள். உப்பு சுவை குறைந்துவிடும்.
இட்லி, தோசை, அடை மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, அகலமான பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் நிரப்பி, மாவு பாத்திரத்தை அதனுள் வைத்து உள்ளே வைக்கவும். தண்ணீரின் கூடுதல் குளிர்ச்சியால் மாவு மேலும் சில நாட்களுக்கு புளிக்காமல் இருக்கும்.
எலுமிச்சம் பழத்தை பயன்படுத்திய பிறகு, தோலை தூக்கி வீசாமல், அதை துண்டுகளாக்கி ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். புது குக்கராக இருந்தால், தினம் ஒரு துண்டு எலுமிச்சைத்தோல் போட்டு, குக்கரில் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்தால் குக்கரின் உள்பாகம் கறுக்காமல் இருக்கும்.
இட்லி, தோசை மாவுகளை பாத்திரத்தில் அடைக்கும்போது, பாத்திரத்தின் பாதி அளவுக்கு மட்டுமே ஊற்றுங்கள். மாவு பொங்கி வழியாமல் இருக்கும்.
பீட்ரூட் நறுக்கும்போது கைகளில் கறை ஒட்டுவதைத் தவிர்க்க, பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேகவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தோலை உரித்து, துண்டு களாக்கினால், கறை ஒட்டாமல் இருப்பதோடு நறுக்குவதும் எளிதாக இருக்கும்.
வீட்டில் தயாரித்து வைத்திருக்கும் பஜ்ஜி மாவு இருக்கிறதா? சாம்பார் தயாரிக்கும்போது இந்த பஜ்ஜி மாவில் ஒரு ஸ்பூன் எடுத்து குளிர்ந்த நீரில் கரைத்து, கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும். சாம்பார் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
தேங்காயில் செய்த பூரணம் நீர்த்துவிட்டால் போளி, சுகியன், கொழுக்கட்டை போன்ற பலகாரங்கள் செய்வது சுலபமாக இருக்காது. எனவே ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் பூரணத்தைப் போட்டுக் குறைந்த தீயில் சில நிமிடங்கள் கிளறுங்கள். ஆறியதும் பூரணம் உருட்டும் பதத்துக்கு கெட்டியாகி விடும்.
கேரட் மலிவாக கிடைக்கும் சமயத்தில் அதிக அளவில் வாங்கி, தோல் சீவி குக்கரில் வேகவையுங்கள். ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது தேவையான அளவுக்கு எடுத்து, ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பால், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் சுவையான கேரட் மில்க் ஷேக் தயார்.
மிக்ஸியை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு, உறை போட்டு மூடி வைப்பது சிரமமாக இருக்கும். அதனால் ஜார் பொருத்தும் பகுதியில் தூசுபடாமல் இருக்க, பொருத்தமான தட்டு ஒன்றை அதன் மீது வைத்துமூடி வைக்கலாம்.