
கொத்தம்பீர் வடி:
கொத்தமல்லி 2 கப்
வெள்ளை எள் 2 ஸ்பூன்
அரிசி மாவு 1/2 கப்
கடலை மாவு 1 கப்
காரப்பொடி 1ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பச்சை மிளகாய் 2
பூண்டு 4
சீரகம் 1 ஸ்பூன்
தனியா 2 ஸ்பூன்
பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், எள், தனியா ஆகியவற்றை அரைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்புடன் சேர்த்து கலக்கவும். அரிசி மாவு, கடலை மாவு, காரப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து சிறிய உருண்டைகளாக நான்கு செய்து இட்லி தட்டி ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். வெந்த உருளைகளை வட்ட வட்ட துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்க சுவையான முறுமுறுப்பான கொத்தம்பீர் வடி தயார்.
இதனை தக்காளி சாஸ், தேங்காய் சட்னியுடன் பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
வடா பாவ்:
பாவ் 4
வெந்த உருளைக்கிழங்கு 4
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1/4 கப்
பெருங்காயத்தூள் சிறிது
பேக்கிங் சோடா ஒரு பின்ச்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் 1/2 ஸ்பூன்
தனியாத் தூள் 1 ஸ்பூன்
வெந்தயம் பொடி 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு நறுக்கியது 2 ஸ்பூன் கொத்தமல்லி சிறிது
சர்க்கரை 1ஸ்பூன்
எலுமிச்சம் பழம் 1
உப்பு தேவையானது
எண்ணெய் பொரிக்க
வறுத்த பச்சை மிளகாய் 4
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, காரப்பொடி, மஞ்சள் பொடி, பேக்கிங் சோடா, பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்கு மசிக்கவும்.
வாணலியில் கடுகு சேர்த்து பொரிந்ததும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து உப்பு, தனியா, சர்க்கரை, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். கடைசியாக எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து விடவும். சிறிது ஆறியதும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உருளைக்கிழங்கு உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும். நன்கு பொன் கலரில் வந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். பச்சை மிளகாய் 4 வறுத்து எடுத்து அதையும் தட்டில் தனியாக எடுத்து வைக்கவும்.
பாவை எடுத்து நடுவில் கத்தியால் வெட்டி புளி சட்னி, கொத்தமல்லி, உப்பு, புளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த பச்சை சட்னி சேர்த்து பொரித்த வடைகளை வைத்து ஒரு வறுத்த பச்சை மிளகாய் சேர்த்து மூடி வைக்கவும். மிகவும் ருசியான வடா பாவ் தயார்.
கண்ட போஹா:
அவல் 2 கப்
உருளைக்கிழங்கு 1
வெங்காயம் 1
வேர்க்கடலை 1 கைப்பிடி
கொத்தமல்லி சிறிது
தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு சிறிது
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை, சீரகம் 1/2 ஸ்பூன்
அவலை தண்ணீர்விட்டு களைந்து நான்கு நிமிடம் ஊறவிடவும். பிறகு நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து எண்ணை விட்டு கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கவும்.
பிறகு வேகவைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து, தோல் நீக்கிய வேர்க்கடலையையும் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். இப்பொழுது தேவையான உப்பு, மஞ்சள்தூள், ஊறவைத்த அவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். இறக்கியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துவிட மிகவும் ருசியான கண்ட போஹா தயார்.
இதனை பரிமாறும் சமயம் முறுமுறுப்பான சேவ் மேலாகத் தூவி பரிமாற அனைவரும் திரும்பி சாப்பிடுவார்கள்.