

நார்த்தங்காய் இலை துவையல்
தேவை:
நார்த்தங்காய் இலைகள் - 10
வர மிளகாய் - 5
ஓமம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையாள அளவு
செய்முறை:
முதலில், நார்த்தை இலைகளை நன்றாக கழுவி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வர மிளகாய், ஓமம், பெருங்காயம் ஆகிய மூன்றையும் சேர்த்து வறுத்து, அதில் உலர்ந்த நார்த்தை இலைகள், மீதமுள்ள ஓமம், பெருங்காயம், மிளகாய் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். சுவையான நார்த்தங்காய் இலை துவையல் தயார். இது பித்தத்தை தணிக்கும்.
சுண்டைக்காய் துவையல்
தேவை:
சுண்டைக்காய் – 1 கப்
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
வர மிளகாய் – 3
பூண்டு – 3 பல்
இஞ்சி – சிறிய துண்டு
சின்ன வெங்காயம் – 4
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 டீஸ்பூன் (தாளிக்க)
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
சுண்டைக்காயை நடுவில் வெட்டி, அதை சுத்தமான நீரில் 2 முறை கழுவி வடிக்கவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுண்டைக்காயை ஊறாத அளவிற்கு நன்றாக வறுக்கவும் தனியாக எண்ணெயில் பருப்பு, வர மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், புளி ஆகியவற்றை வறுக்கவும்.
எல்லாவற்றையும் ஆறவைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் மிகக் குறைவாக வைத்து அரைக்கவும். பின்னர்
கடுகு, கறிவேப்பிலை தாளித்து துவையலில் கலந்து விடவும். சுவையான சுண்டைக்காய் துவையல் ரெடி.
பச்சைப்பயறு துவையல்
தேவை:
பச்சைப்பயறு - அரை கப், பூண்டு - ஒரு பல்,
இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
வர மிளகாய் - 5, புளி - கோலி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும். ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். சுவையான பச்சை பயறு துவையல் ரெடி.
முசுமுசுக்கை துவையல்
தேவை:
முசுமுசுக்கை இலை - ஒரு கட்டு
இஞ்சி -10 கிராம் (தோல்சீவி பொடிதாக அரிந்து கொள்ளவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை -1 கைபிடி அளவு
புளி - சிறிது , மிளகாய் வற்றல் - 3
கறுப்பு உளுந்து - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் புளி, மிளகாய் வற்றல், கறுப்பு உளுந்து போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் முசுமுசுக்கை இலை, கொத்தமல்லித்தழை, கறி வேப்பிலையை சேர்த்து வதக்கி, சற்று ஆறிய பின்னர் உப்பு கலந்து மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் முசுமுசுக்கை துவையல் ரெடி.இதை சூடான சாதத்துடன் சேர்த்து சிறிது நெய் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.