சர்க்கரை, க்ரீம் வேண்டாம்… வீட்டிலேயே 10 நிமிடத்தில் ஆரோக்கியமான 'தர்பூசணி ஐஸ்க்ரீம்' ரெடி!

watermelon ice-cream
watermelon ice-cream
Updated on

கோடைக்காலம் வந்துவிட்டாலே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் தேடுவது சில்லென்ற ஐஸ்க்ரீம்களைத்தான். ஆனால், கடைகளில் விற்கப்படும் ஐஸ்க்ரீம்களில் அதிகப்படியான வெள்ளைச் சர்க்கரையும், செயற்கை நிறமூட்டிகளும், பதப்படுத்திகளும் சேர்க்கப்பட்டிருக்கும். 

இவற்றை அடிக்கடி சாப்பிடுவது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும். ஆனால், வீட்டிலேயே இயற்கையான முறையில் தர்பூசணி ஐஸ்க்ரீம் செய்யலாம். பாலோ, க்ரீமோ, சர்க்கரையோ இல்லாமல், தர்பூசணியின் அசல் சுவையோடும், நாவில் கரையும் ஒரு ஆரோக்கியமான ஐஸ்க்ரீம் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • தர்பூசணி துண்டுகள் - 3 கப்

  • நன்கு பழுத்த வாழைப்பழம் - 1 

  • தேன் அல்லது பேரீச்சை சிரப் - 2 டேபிள் ஸ்பூன்

  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

  • புதினா இலைகள் - 2 அல்லது 3

செய்முறை!

முதலில் தர்பூசணியை வெட்டி, அதில் உள்ள விதைகளை முழுமையாக நீக்கிவிட்டுச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதேபோல, ஒரு பழுத்த வாழைப்பழத்தையும் வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாழைப்பழம் தான் ஐஸ்க்ரீமுக்கு அந்த 'க்ரீமியான' தடிமனான பதத்தைக் கொடுக்கும். 

நறுக்கிய தர்பூசணி மற்றும் வாழைப்பழத் துண்டுகளை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, ஃப்ரீசரில் குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் வரை நன்றாக உறைய வைக்க வேண்டும்.

பழங்கள் நன்றாகக் கல் போல உறைந்த பிறகு, அவற்றை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் புளிப்புச் சுவையை பேலன்ஸ் செய்ய ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, இனிப்பிற்காக 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஓரிரு புதினா இலைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
அரை டம்ளர் தண்ணீர் கதை உங்களுக்குத் தெரியுமா? – உங்கள் வாழ்க்கைத் தத்துவத்தையே மாற்றும்!
watermelon ice-cream

தண்ணீர் அல்லது பால் எதையும் சேர்க்கக் கூடாது. இப்போது மிக்ஸியை இயக்கி, பழங்களை நன்றாக அரைக்க வேண்டும். ஆரம்பத்தில் சற்று கொரகொரப்பாக இருக்கும், ஓரங்களில் உள்ளதை எடுத்து விட்டு மீண்டும் பொறுமையாக அரைத்தால், ஒரு அருமையான, மென்மையான ஐஸ்க்ரீம் பதத்திற்கு வந்துவிடும்.

அரைத்த இந்த ஐஸ்க்ரீம் கலவையை அப்படியே உடனே சாப்பிடலாம், சுவை பிரமாதமாக இருக்கும். ஒருவேளை கடைகளில் வாங்குவது போல 'ஸ்கூப்' செய்து சாப்பிட விரும்பினால், இந்த கலவையை மீண்டும் ஒரு டப்பாவில் மாற்றி, ஃப்ரீசரில் 2 மணி நேரம் செட் ஆக விடுங்கள். 

இதையும் படியுங்கள்:
பக்குவமான ஜிலேபி! மாவு கரைப்பதில் இருந்து பாகு காய்ச்சுவது வரை டிப்ஸ்!
watermelon ice-cream

எந்தவிதமான ரசாயனங்களும், சர்க்கரையும் சேர்க்காத 100% இயற்கையான 'ஹெல்தி தர்பூசணி ஐஸ்க்ரீம்' தயார்.

logo
Kalki Online
kalkionline.com