

1. கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 200 கிராம்
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி - ஒரு கப்
நெய் - 2 டீஸ்பூன்
புதினா - கால் கட்டு
பச்சை மிளகாய் - 2
உப்பு - சிறிதளவு
செய்முறை:
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவை, நறுக்கிய காய்கறிகள், புதினா, நெய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கலந்து சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இட்லி பாத்திரத்தில் இந்த உருண்டைகளை வைத்து, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். சூப்பரான கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை ரெடி.
2. கோதுமை ரவை அடை
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - ஒரு கப்
கோதுமை ரவை- அரை கப்
அரிசி மாவு
கேரட் துருவல் - தலா அரை கப்
வெங்காயம் - 4
இஞ்சி- தேவையான அளவு
பச்சை மிளகாய் - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், கோதுமை ரவை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து கொட்டிய பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். இப்போது கோதுமை ரவை நன்றாக ஊறி மாவு கெட்டியான பதத்தில் இருக்கும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், மாவை அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும். அள்ளும் சுவையில் அடை ரெடி.
3. கோதுமை ரவை வடை
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 250 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 100 கிராம்
கேரட், கோஸ் (துருவியது) - 1 கப்
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு - தேவைக்கேற்ப
சோம்பு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 200 மிலி
செய்முறை:
கோதுமை ரவையுடன் வெங்காயம், துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், மசாலாத்தூள், கொத்தமல்லி, சோம்பு, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதனை வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சிறு சிறு வடைகளாய் தட்டி, பொன்னிறமாய் எடுக்கவும். மொறு மொறு வடை ரெடி. இதற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி சுவையாக இருக்கும்.
4. கோதுமை ரவை ஜாங்கிரி
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 2 கப்
அரிசி மாவு, கடலை மாவு - தலா 3 டீஸ்பூன்
நெய் - அரை கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பால் - அரை கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
குங்குமப்பூ - சிறிது
செய்முறை:
கோதுமை ரவை, அரிசி மாவு, கடலை மாவு, சிறிது நெய் ஆகியவற்றை சிறிது பால் விட்டு, இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். அதில் எலுமிச்சை சாறு கலந்து, 12 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தாம்பாளத்தில் அதைக் கொட்டி, சிறிது பால் தெளித்து, கையால் சுழற்றி சுழற்றி தேய்த்து கம்பி பதத்திற்கு கொண்டு வரவும். சர்க்கரையை இளம் பாக்கு காய்ச்சி, குங்குமப்பூ சேர்க்கவும். தட்டையாக உள்ள வாணலியில் நெய் விட்டு, ஜாங்கிரி துணியில் மாவை வைத்து பிழிந்து சிவந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் தோய்த்து எடுத்து வைக்கவும். சுவையான ஜாங்கிரி தயார்.
5. கோதுமை ரவை பிரியாணி
தேவையான பொருட்கள்;
கோதுமை ரவை – ஒரு கப்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – ஒன்று
பட்டை – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
கிராம்பு – 2
கல் பாசி – சிறிது
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி – 1/2 கைப்பிடி அளவு
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – ஒரு டீஸ்பூன்
காளான் – ஒரு கப்
பச்சை பட்டாணி – 1/4 கப்
கேரட் – ஒன்று
பீன்ஸ் – 5
தண்ணீர் – 2 கப்
எலுமிச்சை பழச்சாறு – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து கோதுமை ரவையை சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்க வேண்டும். பிறகு இதை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி இவை இரண்டும் நன்றாக காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, கல்பாசி இவற்றை சேர்க்க வேண்டும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாயும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி இவற்றை சேர்த்து வதக்கவேண்டும். தக்காளி லேசாக வதங்க ஆரம்பித்ததும் இதில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து குறைந்த தீயில் இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு இதில் தயிர் சேர்த்து கலக்க வேண்டும். காளான், பச்சை பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து விட வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் நாம் வறுத்து வைத்திருக்கும் கோதுமை ரவையை அதில் சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு குக்கரை மூடி விசில் போட்டு விட வேண்டும். மிதமான தீயில் இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு குக்கர் விசில் சென்றதும் குக்கரை திறந்து நன்றாக கிளறிவிட்டு பரிமாறலாம். சுவையான பிரியாணி தயார்.
சாதாரண ரவைக்கு மாற்றாக கோதுமை ரவையை வைத்து ஒரே நாளில் சத்தான, சுவையான மற்றும் விதவிதமான 5 உணவுகளை மிக எளிதாக சமைத்து குடும்பத்திற்குப் பரிமாறலாம்.