

1. குதிரைவாலி வடை
தேவை:
குதிரைவாலி– 1 கப்
கடலை பருப்பு – ½ கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி – 1 சிறு துண்டு
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – ½ ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
குதிரைவாலியை 10 மணி நேரமும், கடலைப் பருப்பை 3 மணி நேரமும் ஊறவைக்கவும். பிறகு இரண்டையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
அதில் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கவும்.
சிறு வடை வடிவில் செய்து மிதமான தீயில் எண்ணெயில் பொரிக்கவும். மொறு மொறு குதிரைவாலி வடை ரெடி.
2. குதிரைவாலி ஊத்தப்பம்
தேவை:
குதிரைவாலி அரிசி– ஒன்றரை கப்
உளுத்தம்பருப்பு – அரை கப்
குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது) – 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
இஞ்சி பொடியாக நறுக்கியது – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – அரை ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கேரட் – 1
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
குதிரைவாலி அரிசியை 2 மணி நேரமும், உளுத்தம்பருப்பை அரை மணி நேரமும் ஊறவைக்கவும். இரண்டையும் தனித்தனியாக அரைத்து, உப்பு சேர்ந்து கலந்துவைக்கவும். 4 மணி நேரம் கழித்து மாவுடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை கலந்து தோசைக்கல்லில் தடிமனான தோசைகளாக வார்த்தெடுக்கவும். அல்டிமேட் சுவையில் குதிரைவாலி ஊத்தப்பம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி வெகு பொருத்தம்.
3. குதிரைவாலி பர்பி
தேவை:
குதிரைவாலி மாவு - ஒரு கப்,
மில்க் பவுடர் - முக்கால் கப்,
கன்டன்ஸ்டு மில்க் - அரை கப்,
பசும் பால் - 50 மி.லி,
நெய் - இரண்டு ஸ்பூன்
வெண்ணெய் - இரண்டு ஸ்பூன்
முந்திரி, பாதாம் - தலா 5 (பொடித்தது)
செய்முறை:
கடாயில் குதிரைவாலி மாவை சற்று வறுத்த பின், முந்திரி, பாதாம் பவுடர், பால் பவுடர், பால், கன்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும். நன்றாக சேர்த்து வந்ததும் நெய் சேர்த்து கிளறிவிடவும்.
பால்கோவா பதம் வந்தவுடன் இறக்கி தட்டில் வெண்ணெய் தடவி அதில் ஊற்றி பரவி விடவும். பத்து நிமிடங்கள் கழித்து,சிறிய துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்க,. சுவையான, சத்தான குதிரைவாலி பர்பி ரெடி.
4. குதிரைவாலி பாயாசம்
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி - 100 கிராம்
தேங்காய் பால் -1 கப்
சர்க்கரை - 100 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் - தலா 1 டீஸ்பூன்
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வரகரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை பொடித்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் வறுத்த பாசிப்பருப்புடன் 4 கப் தண்ணீர் விட்டு, அரை பதத்திற்கு வேகவைக்க வேண்டும்.
பிறகு இதனுடன் ஊறவைத்த வரகரிசியை சேர்த்து, நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் தேங்காய்பால், சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட வேண்டும். பிறகு ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான குதிரைவாலி அரிசி பாயாசம் ரெடி.
5. குதிரைவாலி லெமன் இட்லி
தேவையானபொருட்கள்:
குதிரைவாலி அரிசி - 3 கப்
சம்பா அவல் - ஒரு கப்
உளுந்து - ஒரு கப்
கடுகு, உளுத்தம்பருப்பு-தேவையான அளவு
கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு -
தாளிக்கத் தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
குதிரைவாலி அரிசி, உளுந்து இரண்டையும் நன்கு களைந்து நான்கு மணிநேரம் ஊறவிடவும். அவலைச் சுத்தம் செய்து களைந்து வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்கு நன்கு நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, தேவையான அளவு மாவை மினி இட்லிகளாக வேகவைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு. உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு தாளிக்கவும். அவை சிவந்தவுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிரட்டவும்.
ஏற்கெனவே இட்லியில் உப்பு சேர்த்திருப்பதால், தேவையான உப்பை மட்டும் எலுமிச்சைச் சாற்றுடன் சேர்த்து வாணலியில்விட்டு, பிறகு வெந்த இட்லிகளைச் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாக நன்கு கிளறி இறக்கவும். அள்ளும் சுவையில் குதிரைவாலி அரிசி லெமன் இட்லி ரெடி.
இந்த எளிய 5 சிறுதானிய ரெசிபிகள் மூலம் உங்கள் அன்றாட உணவில் சுவையையும் சத்தையும் ஒரே நேரத்தில் சேர்த்து குடும்பத்தினரை அசத்தலாம்.