ஒரே மாதிரியான கிச்சடியா? சுவை அதிகரிக்கும் 5 வித்தியாசமான ரெசிபி!

அவல், சோயா, கோதுமை ரவை மற்றும் பூசணி கொண்டு நிமிடங்களில் அசத்தல் கிச்சடி செய்யும் எளிய முறைகள்.
கிச்சடி ரெசிபி
கிச்சடி ரெசிபிGemini image

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

1. அவல் கிச்சடி

தேவையான பொருட்கள்:

கெட்டி அவல் - அரை கப்

தேங்காய்ப்பால் - ஒரு கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

நிலக்கடலை - 3 ஸ்பூன்

எண்ணெய் - 5 ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

வர மிளகாய் - 4.

செய்முறை:

அவலை தேங்காய்ப் பாலில் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். நிலக்கடலையை வறுத்துப் பொடிக்கவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பிறகு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

அவலையும் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து, பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். சுவையான அவல் கிச்சடி ரெடி.

2. தக்காளி கிச்சடி

தேவையான பொருட்கள்:

தக்காளி - 4

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து ஒரு டீஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய் இரண்டையும் போட்டு வதக்கவும்.

கிச்சடி ரெசிபி
கிச்சடி ரெசிபிGemini image

வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி, பெருங்காயத்தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும். பச்சை வாடை போனதும் அதனுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும். வெந்ததும் அதை சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு தக்காளி கலவையுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 3 டீஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.

கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி கிச்சடியில் ஊற்றி நன்றாக கலக்கிவிடவும். சுவையான தக்காளி கிச்சடி தயார்.

3. சோயா கிச்சடி:

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் (ஊறவைத்தது) - ஒரு கப்

அரிசி (ஊறவைத்தது) - அரை கப்

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 2

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி, பூண்டு துருவியது - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

ஜீரகம் - ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய மல்லி இலை - அரை கப்

யோகர்ட் - அரை கப்

பச்சை பட்டாணி - கால் கப்

செய்முறை:

ஒரு அடி அகலமான கனமான பாத்திரம் எடுத்துக் கொள்ளவும். அதில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் அரிசி, சோயா பீன்ஸ், அரிசி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்க்கவும். இப்போது சோயா பீன்ஸ், அரிசி எல்லாம் நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

ஒரு பேனில் நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும். அதில் சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

இந்த தாளிப்பை குழைந்த சாதம், பீன்ஸில் சேர்க்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் யோகர்ட் சேர்க்கவும். கூடவே தேவையான அளவு உப்பும் வேகவைத்த பட்டாணியையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் 10 நிமிடங்கள் சேர்த்து சமைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். வெட்டிய மல்லி இலையை தூவவும். சுவையான, சத்தான சோயா கிச்சடி ரெடி.

4. கோதுமை ரவை கிச்சடி

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை – 1 டம்ளர்

கேரட் – 1

பீன்ஸ் – 10

தக்காளி – 1

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

மஞ்சள்பொடி – சிறிது

இஞ்சி – சிறிது

பூண்டு – 2 பல்

சோம்பு – 1 டீஸ்பூன்

புதினா – சிறிது

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல்: வீடே மணக்கும் ரகசிய மசாலா செய்முறை!
கிச்சடி ரெசிபி

செய்முறை:

கேரட், பீன்ஸ், தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு போட்டு தாளித்து, இஞ்சி பூண்டை நசுக்கிப் போட்டு நறுக்கிய பச்சை மிளகாய், காய்கறிகளை போட்டு வதக்கவும்.

பின் கோதுமை ரவையையும் சேர்த்து வதக்கி புதினா, மஞ்சள் பொடி, உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 சத்தம் வரும் வரை வதக்கவும். வெந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும். அசத்தல் சுவையில் கோதுமை ரவை கிச்சடி தயார்.

5. வெள்ளை பூசணி கிச்சடி

தேவையான பொருட்கள்:

பூசணி - 2 கீற்று

எண்ணெய் - தேவைக்கேற்ப

சீரகம் - அரை டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

கொத்தமல்லி - 1 கைப்பிடி

கறிவேப்பிலை - 1 கொத்து

உப்பு - தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
பேக்கரி சுவையில் 5 விதமான பிரெட் உணவுகள்: வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!
கிச்சடி ரெசிபி

செய்முறை:

வெள்ளை பூசணியின் கடினமான மேல் தோலைச்சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து சிவந்ததும், கீறிய பச்சை மிளகாய் போட்டு, கருவேப்பிலையும் சேர்த்து தாளிக்கவும்.

பிறகு நறுக்கிய பூசணியை சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு பிரட்டி விடவும். பின் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்துவிடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சாம்பல் பூசணி கிச்சடி தயார்.

தினமும் ஒரே மாதிரியான உணவைச் செய்யாமல், ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த 5 வகையான கிச்சடி ரெசிபி மிகக் குறைந்த நேரத்தில் சுலபமாகச் செய்து குடும்பத்தினரை அசத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com