

தற்காலத்தில் விழாக்கள் மற்றும் விருந்துபச்சாரம் நடைபெறும் இடங்களில் பெரிய அளவிலான முதன்மை உணவு (Main Course) க்குப் பின் 'டெஸர்ட்' என்ற பெயரில் வகை வகையான ஐஸ் கிரீம்களும் இனிப்புகளும், விருந்தினர்கள் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியுடன் வரிசைப்படுத்தி வைத்திருப்பது வழக்கமாக உள்ளது.
அவற்றை தனித்தனியாக உண்பதைவிட காம்போ (Combo) வாக உண்பதில் பலரும் பேரார்வம் காட்டுகின்றனர். அதாவது, ஐஸ்கிரீமுடன் கேரட் அல்வா அல்லது குளோப் ஜாமூனை சேர்த்து உண்பதுபோல். இவ்வாறு உண்ணப்படும் டெஸர்ட் வகைகளில், பலராலும் விரும்பி எடுத்து அதிகளவில் உட் கொள்ளப்படும் இனிப்பு 'குளோப் ஜாமூன்' என்றால் உங்களால் நம்ப முடிகிறதா மக்களே?
இன்றைய தினத்தில் "கிங் ஆஃப் டெஸர்ட்ஸ்" என்ற கிரீடத்தை பெருமையுடன் சூட்டிக் கொண்டிருக்கிறது குளோப் ஜாமூன். இதன் பிறப்பிடம் மற்றும் இது தொடர்பான பல ஆச்சர்யப்படும்படியான விஷயங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
பாலை அடுப்பில் வைத்து, அது கெட்டித்தன்மை பெறும் வரை குறுக்கி, பின் அதை சிறு சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து ஜீரா (சர்க்கரைப் பாகு) வில் ஊறவைத்தால் குளோப் ஜாமூன் ரெடி. இதன் மிருதுவான டெக்ச்சரும் இனிப்பான சுவையும், ஸ்பூனால் கிள்ளி பாகில் நனைத்து சுலபமாக வாயில் போட்டு உண்டு மகிழக்கூடிய லாவகமும், இதற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் வேறு பல நாடுகளிலும், சிறுவர் பெரியவர் உள்ளிட்ட பல அபிமானிகளைப் பெற்றுத்தந்துள்ளன.
குளோப் ஜாமூன் செய்கையில் மில்க் சாலிட் (Khoya) உடன் கொஞ்சம் மைதா மாவு மற்றும் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவும் சேர்த்துப் பிசைந்தால் உருண்டைகள் உடையாமல் ஒருங்கிணைந்து வரும்.
மேலும் சர்க்கரைப் பாகில் ஏலக்காய்ப் பவுடர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொண்டால் சிரப் நல்ல வாசனை தரும். உருண்டைகள் மீது கூடுதல் சுவைக்காகவும் கவர்ச்சிக்காகவும் குங்குமப் பூ மற்றும் சீவிய பாதாம் பொடியை தூவி வைக்கலாம்.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் குளோப் ஜாமூன் வெவ்வேறு உருவெடுப்பதும் உண்டு. உருண்டையின் நிறத்தை அடர்த்தியாக்கி 'காலா ஜாமூன்' என்று அழைப்பதுண்டு. இதன் சுவையும் சிறிது வேறுபடும். ஜாமூனின் நடுப் பகுதியில் நட்ஸ் அல்லது பன்னீர் போன்றவற்றை வைத்து ஸ்டஃப்ட் (Stuffed) ஜாமூன் செய்வதும் உண்டு. கொஞ்சமாக ஜீராவில் ஊறிய உருண்டைகளை சுகர் சிரப் இல்லாமல் உலர்ந்த நிலையில் பரிமாறப்படும்போது இதை 'ட்ரை ஜாமூன்' என்று அழைக்கின்றனர்.
ஐஸ்கிரீமோடு சேர்த்து பரிமாறப்படும் ஜாமூன்கள் இனிப்பு சுவையிலும் சைஸிலும் மாறுபட்டிருக்கும். உலகளவில் இது பிரசித்தி பெற்று விளங்க, இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சாதாரணமான பொருட்கள் மற்றும் சூப்பர் சுவை என்று தாராளமாகக் கூறலாம்.
தற்போது இது திருமண விழாக்கள், முக்கியமான பண்டிகைகள் போன்ற பலவகை சுபநிகழ்வுகளிலும் தவிரக்க முடியாததொரு டெஸர்ட்டாக மாறியுள்ளது பிரமிப்பை உண்டு பண்ணுகிறது. இதற்கு "கிங் ஆஃப் டெஸர்ட்ஸ்" என்ற பட்டம் வழங்கி கௌரவித்திருப்பது சாலப் பொருத்தமே!