குழந்தைகளைக் கவரும் சாக்லேட் மற்றும் ஆரோக்கியமான ஆப்பிள் பர்பி செய்வது எப்படி?

homemade-burfi-recipes
homemade-burfi-recipes
Updated on

தேங்காய் பால் பர்பி

தேவை:

தேங்காய்ப் பால் – 1 கப்

துருவிய தேங்காய் – 1 கப்

பனங்கற்கண்டு – ¾ கப்

நெய் – 2 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி – ¼ டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடு செய்யவும். அதில் தேங்காய் பாலும் பனங்கற்கண்டையும் சேர்த்து கரையவிடவும். பிறகு துருவிய தேங்காயை சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.

கலவை கெட்டியாகி பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும் போது ஏலக்காய் பொடி சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் ஊற்றி சமப்படுத்தி, குளிர்ந்த பின் சதுரங்களாக வெட்டி பரிமாறவும். சுவையான தேங்காய் பால் பர்பி ரெடி. 1 நாள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தே பயன்படுத்தவும்.

ஆப்பிள் பர்பி

தேவை:

ஆப்பிள் – 1 (நறுக்கியது)

கோதுமை மாவு – 1/2 கப்

வெல்லம் – 2 டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி – சிறிது

நறுக்கிய பாதாம் / முந்திரி – சில

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு சூடாக்கி நறுக்கிய ஆப்பிள் சேர்த்து 2–3 நிமிடம் வதக்கவும்.

பின்னர் கோதுமை மாவு மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கலவை சிறிது குளிர்ந்த பின் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாம்/முந்திரி சேர்த்து, தாம்பாளத்தில் கொட்டி பரப்பி வில்லைகள் போடவும். அல்டிமேட் சுவையில் ஆப்பிள் பர்பி ரெடி.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கான ஹெல்தி ஸ்நாக்ஸ்: இதோ 3 வகை உருண்டைகளின் செய்முறை!
homemade-burfi-recipes

மலாய் பர்பி

தேவை:

பால் - ஒன்றே கால் லிட்டர்

எலுமிச்சைப்பழம் (பெரியது) - 1 (சாறு எடுக்கவும்)

சர்க்கரை - 200 கிராம்

ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை

நெய் - 50 மில்லி

பாதாம், பிஸ்தா - அலங்கரிக்க

செய்முறை:

கால் லிட்டர் பாலை தனியே எடுத்து வைக்கவும். மீதம் உள்ள ஒரு லிட்டர் பாலை நன்கு கொதிக்கவைக்கவும்.

இதிலிருந்து ஒரு கரண்டி பால் எடுத்து, இதில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றினால், பால் திரிந்துவிடும். இதை, கொதிக்கவைத்த பாலில் ஊற்றவும். பால் திரிந்து மிதக்க ஆரம்பிக்கும். இதை மஸ்லின் துணியில் நன்கு வடிகட்டவும். இதுதான் பனீர்.

மஸ்லின் துணியுடன் சேர்த்து டேப் தண்ணீரில் சிறிது அலசி பனீரை நன்கு அலசிவிடவும். இதனால் பனீரில் உள்ள எலுமிச்சையின் மணம் அறவே அகன்றுவிடும்.

தனியாக எடுத்து வைத்த கால் லிட்டர் பாலை கொதிக்க வைத்து, அதில் பனீரைச் சேர்த்துக் கலக்கவும். இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் ஊற்றி குறைந்த தீயில் நன்கு கிளறவும். சுவையான மலாய் பர்பி ரெடி.

சாக்லெட் பர்பி

தேவை:

பால் பவுடர் - 1/4 கப்

கோகோ பவுடர் - 1 ஸ்பூன்

சர்க்கரை - 1/3 கப்

தண்ணீர் - 1/4 கப்

நெய் - 2 ஸ்பூன்

முந்திரி, பாதாம் - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
முக்கனிகளின் மகத்துவம்: பலாக்காயை வைத்து விதவிதமாகச் சமைக்கலாம் வாங்க!
homemade-burfi-recipes

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். சர்க்கரை பாகு காய்ச்சி கொள்ளவும். பாகுடன் பவுடர் கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

மிதமான சூட்டில் இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அதனுடன் நெய் சேர்த்துக்கொள்ளவும்.

தட்டில் நெய் தடவி வைத்து கொள்ளவும். சாக்லேட் கலவையை இறக்குவதற்கு முன் பாதாம், முந்திரியை லேசாக தட்டிவிடவும். ஆறியவுடன் கத்தி கொண்டு வில்லைகள் போடவும். குழந்தைகள் விரும்பும் சாக்லெட் பர்பி தயார்.

logo
Kalki Online
kalkionline.com