

விடுமுறையில் இருக்கும் பிள்ளைகளுக்கு விதவிதமாக எவ்வளவு செய்தாலும் கூலாக, ஜில்லென்று இருப்பதைத்தான் விரும்புவார்கள். ஐஸ்கிரீம், என்றால் கடையில்தான் வாங்கவேண்டும். ஆனால் எளிமையாக,சுவையாக வீட்டிலிருந்தே தயாரிக்க பாப்ஸிகல் மோல்ட் மட்டும் இருந்தால் போதும். வெரைட்டியான பாப்ஸிகலை தயாரித்து எல்லோரையும் மகிழ்விக்கலாம்.
மாம்பழம், தேங்காய் பால் பாப்ஸிகல்
தேவையான பொருட்கள்:
மாம்பழத் துண்டுகள்-3 கப், சர்க்கரை அல்லது கன்டென்ஸ்ட் மில்க்-தேவைக்கு, தேங்காய் பால் -1கப்,எசென்ஸ்- -தேவையெனில்,நட்ஸ்-பொடியாக நறுக்கியது.
செய்முறை:
மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காய் பால், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து அடிக்கவும்.பின் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து நறுக்கிய நட்ஸ் சேர்த்து இதை பாப்ஸிகல் மோல்ட் ல் ஊற்றி ஃ ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். குறைந்தது ஆறு மணி நேரம் வைத்திருந்து மோல்ட் லிருந்து எடுத்து பரிமாறவும். இரவு தயாரித்து வைத்துக்கொண்டு காலையில் பிள்ளை களுக்கு கொடுக்க நன்றாக செட் ஆகி இருக்கும்.
சாக்லேட் பாப்ஸிகல்
தேவையானவை:
ஒரு கப் ஃப்ரெஷ் கிரீம்,சாக்லேட் பவுடர்,-2டேபிள் ஸ்பூன், சாக்லேட் சிப்ஸ்-2டீஸ்பூன்.காய்ச்சிய பால்-1/2கப்.
செய்முறை:
ஒரு கப் ஃப்ரெஷ் கிரீம் உடன் சாக்லேட் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவையெனில் காய்ச்சிய பாலுடன் நன்கு கலந்து கொண்டு அதனுடன் சாக்லேட் சிப்ஸ் சேர்க்கவும். இனிப்புக்கு சர்க்கரை பவுடர்-3 டீஸ்பூன் சேர்த்து கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை பாப்ஸிகல் மோல்டில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்துவிட்டு காலையில் எடுக்கவும்.மோல்டிலிருந்து எடுத்து தனியே வைத்து பரிமாறவும்.
மின்ட் பாப்ஸிகல்
தேவையானவை:
எலுமிச்சம் பழ ஜுஸ்,புதினா ஜுஸ் _தலா-2கப்,நன்னாரி சர்பத்2கிளாஸ், சர்க்கரை -தேவைக்கு,இஞ்சி சாறு -1டீஸ்பூன்.சப்ஜா விதை-2டீஸ்பூன்(ஊறியது),
செய்முறை:
ஜுஸ் வகைகளை பாத்திரத்தில் போட்டு கலந்து கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். பின் சப்ஜா விதை ஊறியதை சேர்க்கவும். அனைத்தையும் நன்கு கலந்துகொண்டு பாப்ஸிகல் மோல்டில் ஊற்றி நிரப்பி ஃப்ரீசரில் வைத்து இரவு செட் ஆக விட்டு காலையில் டிமோல்ட் பண்ணி சுவைக்க கொடுக்கவும். சுவைமிகுந்த பாப்ஸிகல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
நுங்கு, இளநீர் பாப்ஸிகல்
தேவையானவை:
நுங்கு -தோலுரித்து,நறுக்கியது-3கப், இளநீர் -4கப், தேங்காய் பால் அல்லது காய்ச்சிய பால்-2கப்.
செய்முறை:
இளநீருடன்,அரிந்த நுங்கை கையால் மசித்து சேர்க்கவும். தேங்காய்பால் சேர்த்து கலந்து தேவையெனில் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து பாப்ஸிகல் மோல்டில் ஊற்றி நிரப்பி ஃப்ரீசரில் வைத்து இரவு செட் ஆகவிட்டு காலையில் டிமோல்ட் பண்ணி சுவைக்க கொடுக்கவும்.
இதைபோல் தர்பூசணி, வெள்ளரி ஜுஸ்,ஆரஞ்சு ஜுஸ், முலாம்பழ ஜுஸ் என தனித்தனியாகவோ இரண்டு, மூன்று பழஜுஸ்சேர்த்தோ பாப்ஸிகல் மோல்டில் ஊற்றி செட் ஆனதும் சுவைக்கலாம்.
பாப்ஸிகல் மோல்ட் இல்லாவிட்டால் குல்ஃபி மோல்டில் செட் செய்து கொடுக்கலாம். ஃபீரிசரில் வைப்பதற்கு முன்பே மோல்டின் நடுவே குச்சி இல்லையெனில் நடுவில் ஐஸ்க்ரீம் குச்சி சொருகிவிட்டு செட் பண்ண எடுக்க சுலபமாக இருக்கும். ஃப்ரீசரிலிருந்து வெளியே எடுத்ததும் சில நிமிடங்கள் குழாய் தண்ணீரில் மோல்டை வைத்திருந்து எடுத்தால் பாப்ஸிகல் எளிதில் மோல்டிலிருந்து பிரிந்து வந்துவிடும்.
இவை யாவும் நான் வழக்கமாக வீட்டில் செய்து கொடுத்து சுவைப்பதை தொகுத்து எழுதியுள்ளேன்.