
காலையில் செய்கின்ற சப்பாத்தி இரவுக்குள் வறண்டு, அப்பளம் போல் மாறிவிடுகிறதா?
சப்பாத்தி செய்யும்போது, மாவில் தண்ணீருக்குப் பதிலாக பால் ஊற்றிப் பிசைந்து செய்தால், நீண்ட நேரத்திற்கு மிருதுவாக இருக்கும்.
மேலும் சப்பாத்தியை தோசைக்கல்லிலேயே வைத்து மூடியிருந்தாலும் சப்பாத்தி இப்படித்தான் வறண்டு போகும். எனவே இதை தவிர்க்கவும்.
பொறியல், கிரேவி போன்றவற்றின் நிறம் ஃபுட் கலர் சேர்க்காமல் சிகப்பாக வரவேண்டுமா?
இதற்கு இரண்டு, மூன்று சிகப்பு மிளகாய்களை விதை நீக்கி, அரை கப் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதைக் கசக்கிப் பிழிந்தால் சிகப்பாக வரும். இதை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
சேமியா உப்புமா செய்யும்போது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்கிறதா?
சேமியாவை வாங்கியவுடன், அதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியவுடன், ஒரு டப்பாவில் எடுத்துவைத்து சேமியா உப்புமா செய்யும்போது பயன்படுத்தினால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்.
சமையலில் கடலைமாவுக்கு பதில் வேறு மாவுகளை உபயோகிக்கலாமா?
கடலைமாவில் புரோட்டீன் மற்றும் மாவுச்சத்துக்கள் நிறைய உள்ளன. மேலும் பூந்தி, பஜ்ஜி, பக்கோடா, உருளைக்கிழங்கு போண்டா, ஓமப்பொடி போன்றவற்றை கடலைமாவில் செய்யும்போதுதான் அதனுடைய ஒரிசினல் ருசியும், மணமும் கிடைக்கும்.
சிலர் வாயுத்தொல்லை ஏற்படுமென்றும், ஜீரணம் பாதிக்கப்படுமென்றும் கடலைமாவைத் தவிர்ப்பார்கள். எனவே பலகாரம் செய்யும்போது கடலைமாவு பாதியும், மற்ற அரிசி மாவு பாதியும் சேர்த்து செய்யலாம்.
கேக் செய்யும்போது அதன் மேற்பகுதி வெடித்து காணப்படுகிறதா?
நீங்கள் கேக் தயார் செய்யும்போது, பேக்கிங் பவுடரைச் சேர்க்க வேண்டிய அளவை விட அதிகமாக சேர்த்தால், கேக்கின் மேற்பகுதி வெடித்து விரிந்துவிடும். எனவே கேக் தயாரிக்கும் போது கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் மட்டுமே பேக்கிங் பவுடரைச் சேர்க்க வேண்டும்.
சோடா உப்பு சேர்க்காமல் குழிப்பணியாரம், ஆப்பம் போன்றவற்றை மிருதுவாகத் தயாரிக்க முடியுமா?
வெந்தயம், உளுந்து, அரிசி மற்றும் சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்து அரைத்து புளிக்க வைத்து, பிறகு குழிப்பணியாரம், ஆப்பம் செய்தால் சோடா உப்பு போட்டதுபோல் மிருதுவாக இருக்கும்.
உடல் சோர்வினை நீக்கும் சுண்டைக்காய்!
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தை அளித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இப்பொழுது சுண்டைக்காயின் மருத்துவப் பயன்களைப் பற்றி
சுண்டைக்காயில் அதிக அளவில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். மேலும் உடல் சோர்வு நீங்கும்.
பெண்கள் பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலம்பெறும்.
சுண்டைக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியை சரிசெய்யும்.
சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்றுப்பொருமல் ஆகியவை நீங்கும்.
சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி சூரணம் செய்து, நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.