சப்பாத்தி மாவை நீண்ட நேரம் மிருதுவாகவும், நிறம் மாறாமலும் சேமிப்பது எப்படி?

chapathi-dough
chapathi-dough
Updated on

நேரத்தையும் சக்தியையும் வீணாக்க வேண்டாம் என்று இரண்டு நாட்களுக்குத் தேவையான மாவைப் பிசைந்து கொள்வதுண்டு. அந்த மாதிரியான சூழ்நிலைகளில் பிசைந்த மாவை ஃபிரிட்ஜில் வைத்து பத்திரப் படுத்துவதுண்டு. அடுத்த நாள் பார்க்கும்போது அந்த மாவு நிறம் மாறியிருப்பதையும், மாவின் மீது சிறு சிறு கருப்புப் புள்ளிகள் தோன்றியிருப்பதையும் காணமுடியும். அப்படி மாவு நிறம் மாறுவதற்கான காரணம் என்ன? அதை மீண்டும் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? மாவு ஃபிரஷ்ஷாகவே இருக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பனவற்றை இப்போது பார்க்கலாம்.

மாவு நிறம் மாறித்தோற்றமளிக்க முக்கிய காரணம் ஆக்ஸிடேஷன் ஆகும். வெளியில் வைத்து மாவில் தண்ணீர் ஊற்றிப் பிசையும்போது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மாவினுள் புகுந்து, மாவில் உள்ள கூட்டுப் பொருட்களுடன் சேர்ந்து வினை புரிந்து, மாவின் நிறம் மாற காரணமாகிவிடுகின்றன. மேலும் மாவில் இயற்கையாகவே உள்ள சில என்சைம்களும் மாவை கருமை நிறம் கொள்ளச் செய்கின்றன.

இந்த என்சைம்கள் குளிர்ச்சியான சூழ்நிலைகளிலும், அதாவது மாவை ஃபிரிட்ஜில் வைத்த பின்னும் சுறு சுறுப்புடன் செயல் புரிந்து மாவின் நிறமும் டெக்ச்சரும் மாறிவிடும்படி செய்ய உதவி புரிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மாவில் நீர்ச்சத்து அதிகமிருந்தால் மாவு விரைவிலேயே நிறம் மாறி, கெட்டுப் போகவும் வாய்ப்பு உண்டாகும். அதிகமான ஈரப்பதம் என்சைம்களுக்கு அதிக சக்தியளித்து அவை விரைவாக செயல்பட உதவிபுரிகிறது.

மாவின் நிறம் மாறுவதற்கு, மாவு புளித்துப்போவதும் ஒரு காரணம். பிசைந்த மாவை ஃபிரிட்ஜில் வைத்த பின்னும், கோடை காலங்களில், சில மணி நேரங்களில் மாவிலிருந்து புளிப்பு வாசனை வருவதையும், அதன் நிறம் அடர் பழுப்பாக மாறி வருவதையும் நாம் உணரமுடியும். மாவை சுகாதாரமற்ற பாத்திரத்தில் சேமித்து

வைப்பது, மாவு விரைவில் கருமை நிறமடைந்து அதிலிருந்து ஒரு விதமான கெட்ட வாசனை வரவும், மாவின் டெக்ச்சர் ஒட்டும் தன்மையுடன் கொழ கொழப்பாக மாறவும் வழி கோலும். மேலும் சப்பாத்தி செய்வதற்கு பயன்படுத்திய மாவு நாள்ப்பட்டதாக இருக்குமானால், அது விரைவாக செயல்பட்டு மாவை ஆக்ஸிடேஷன் அடையச்செய்யும். விளைவு, மாவு நிறம் மாறி கருக்க ஆரம்பிக்கும்.

இதையும் படியுங்கள்:
மணக்கும் நீராத்தண்ணி சாதமும், நாவூறும் தனியாத் துவையலும்!
chapathi-dough

பிசைந்த மாவை ஃபிரிட்ஜில் வைத்து சேமிப்பதற்கு முன், சிறிது எண்ணெயை விரலில் தொட்டு மாவின் மேற்பரப்பு முழுவதும் ஒரு அடுக்காகத் தடவி பிறகு ஃபிரிட்ஜுக்குள் வைக்கலாம். இப்படிச் செய்வதால், எண்ணெய் ஒரு பாதுகாப்பு வளையம் போல் செயலாற்றும். காற்றில் கலந்துள்ள ஆக்ஸிஜன் சுலபமாக மாவிற்குள் கலந்து மாவு ஆக்ஸிடேஷன் ஆகும் செயலை எண்ணெய் தாமதப்படுத்தும்.

பிசைந்த மாவை காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு இறுக மூடி வைப்பது நல்லது. இவ்வாறு செய்வதால், காற்று மற்றும் காற்றிலுள்ள ஈரப்பதம் மாவில் படுவது தவிர்க்கப்படும். இதனால் மாவு எந்த விதத்திலும் பழுதடையாமல் நாம் வைத்தது போலவே மிருதுத் தன்மையுடன் அப்படியே இருக்கும்.

கோடை கால உஷ்ணத்தின் காரணமாக மாவு விரைவில் புளிக்க ஆரம்பித்துவிடும். எனவே, பிசைந்த மாவை உடனடியாக பயன் படுத்த வேண்டிய தேவை இல்லை எனில், உடனடியாக மாவை ஃபிரிட்ஜுக்குள் வைத்து, தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம்.

மாவை ஃபிரிட்ஜுக்குள் வைத்து சேமிப்பதற்கு முன் அதை ஏழு எட்டு பாகமாகப் பிரித்து உருண்டைகளாக்கி காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு சேமிப்பது நல்லது. இப்படி செய்வதால் அடுத்த முறை சப்பாத்தி சுட தேவைப்படும் உருண்டைகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் அனாவசியமாக மற்ற உருண்டைகள் மீது காற்று மற்றும் உஷ்ணம் பட்டு அவை விரைவில் நிறம் மாறி கெட்டுப் போகும் வாய்ப்பு தடுக்கப்படும்.

மாவை ஃபிரிட்ஜுக்குள் வைத்து பத்திரப்படுத்தினாலும்,

அதை 12 மணி நேரத்திற்குள் மீண்டும் எடுத்து பயன்படுத்தி விடுவது நம் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com