
சுரைக்காய் அடை
தேவை:
பாசி பயறு - 1/4 கப், பச்சை பயறு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப் கொண்டைக்கடலை - 1/4 கப் துவரம் பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப் கருப்பு சுண்டல் - 1/4 கப் அரிசி - 2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2 கறிவேப்பலை - சிறிது சுரைக்காய் - 4 கப் (துருவியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - அடை வார்ப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் அனைத்து பருப்புக்கள் மற்றும் அரிசியை நீரில் குறைந்தது 4 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின் அதை நன்கு கழுவி, மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பெருங்காயத்தூள், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் துருவிய சுரைக்காயை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி இறக்கி, அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலந்துகொள்ளவும். அதோடு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள். அடை மாவு தயார்.
அதன் பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் அடை மாவு கொண்டு அடை வார்த்து, எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் நன்கு பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுத்தால், சுவையான சுரைக்காய் அடை ரெடி! இந்த அடைக்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
சுரைக்காய் பிரியாணி
தேவை:
அரிசி - அரை கிலோ
சுரைக்காய் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 4
பிரிஞ்சி இலை - 1
தக்காளி - கால் கிலோ
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
முந்திரி - 15
எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து அத்தனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய சுரைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். சுரைக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் அரிசியையும் சேர்த்து நன்கு கிளறவும்.
4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, கடலை பருப்பை வறுக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து வறுத்த முந்திரி, கடலைப்பருப்பு சேர்த்து சாதம் உடையாமல் கிளறி பரிமாறலாம்.
சுரைக்காய் அல்வா
தேவை:
சுரைக்காய் துருவல் - 6 கப்
நெய் - 50 மில்லி
பால் - 6 கப்
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
சர்க்கரை - 1 1/2 கப்
பாதாம் - 15
செய்முறை:
முதலில் சுரைக்காயை தோல் நீக்கிவிட்டு சிறிது சிறிதாக துருவி எடுத்துகொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி துருவிய சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதனுடன் பால் சேர்த்து வேகவிட வேண்டும். அதன் பின்பு அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிட்டு வேக வைக்கவும்.
பின்பு சுரைக்காய் வெந்தவுடன் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறிவிட்டு, கடைசியாக அதில் பாதம் பருப்பை உடைத்து சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுரைக்காய் அல்வா தயார்.
*******
சுரைக்காய் - அவல் தயிர் பச்சடி
தேவை:
தோல் நீக்கி, பொடியாக நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப்
தயிர் - 2 கப்
ஊற வைத்த வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
அவல் - அரை கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவலைக் கழுவி, சிறிதளவு நீர் சேர்த்து, பத்து நிமிடம் ஊறவிடவும். பிறகு, ஒரு பேஸினில் நறுக்கிய சுரைக்காய், வெங்காயம், வெந்தயம், உப்பு, கொத்தமல்லித்தழை, அவல் ஆகியவற்றைச் சேர்த்து, இத்துடன் தயிரையும் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும். குளு குளு சுரைக்காய் அவல் தயிர் பச்சடி தயார். இதைக் காலை நேர உணவாக சாப்பிடலாம்.