
மழைக்காலம் வருகிறது, நமது உணவு வகைகளை நாம் தான் தோ்வு செய்து சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவு வகைகளே நல்லது. அதன்பிரகாரம் சில பொடி வகைகள்.
1. கருவேப்பிலைப்பொடி
தேவையானவை
காய்ந்த கறிவேப்பிலை ஒரு கப்
துவரை 100 கிராம்
கருப்பு உளுத்தம் பருப்பு 100கிராம்
காய்ந்த மிளகாய் 15
மிளகு 2 மேசைக்கரண்டி. பெருங்காயத்தூள், உப்பு, தேவைக்கேற்ப
செய்முறை
வாணலியில் கருவேப்பிலையை நன்கு சூடு வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். மிளகு, துவரை, உளுத்தம் பருப்பு, மிளகாய் இவைகளை எண்ணெய் ஊற்றாமல் தனித்தனியே வறுத்து சூடு குறைந்த பின்னர் இவைகளுடன் வறுத்து வைத்த கருவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு, சோ்த்து மிக்சியில் போட்டு நைசாக பொடி செய்துக் கொள்ளவும்.
பின்னர் காற்று போகாத கண்ணாடி, அல்லது ஶ்ரீபெட் ஜாாில் போட்டு வைக்கவும்.
சூடான சாதத்தில் தேவைக்கேற்ப கறிவேப்பிலைப் பொடியைக் கலந்து நல்லெண்ணைய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். செம டேஸ்டாக இருக்கும். இதற்கு வத்தல் குழம்பு, மோா்க்குழம்பு, தயிா், தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். உடல் உஷ்ணம் தவிா்ப்பதோடு, கண்களுக்கும் மிகவும் நல்லது. மேலும் ஆரோக்கியமான பொடியாகும்.
2. கொத்தமல்லி விதைப்பொடி
தேவையானவை
மல்லிவிதை (தனியா)150 கிராம்
கருப்பு உளுத்தம் பருப்பு 100 கிராம்
கடலைப்பருப்பு 100 கிராம்
மிளகாய் வத்தல் 15
பெருங்காயத்தூள், உப்பு, தேவைக்கேற்ப
செய்முறை
அடுப்பில் வானலியில் கொஞ்சமாக எண்ணைய் ஊற்றி, பெருங்காயத்தூள் உப்பு தவிர ஏனைய பொருட்களை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பின்னர் பெருங்காயத்தூள், உப்பு சோ்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
பின்னா் பாட்டில் அல்லது ஜாாில் தண்ணீா் படாதவாறு பத்திரமாக வைத்திருந்து, சூடான சாதத்தில் தேவைக்கேற்ப போட்டு நல்லெண்ணைய் ஊற்றி பிசைந்து சாப்பிடவும். இதற்கும் பொாிச்ச குழம்பு, மோா்க்குழம்பு, தயிா், தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
ஜவ்வரிசி வடகம் பொாித்தும் சோ்த்து சாப்பிடலாம். மேற்படி பொடியும் பித்தத்தால் வரும் தலைசுற்றல், பித்தவாந்தி, வாய்வு போன்ற உபாதைகளை குறைப்பதோடு எளிதில் ஜீரணம் ஆகும்.