
தினமும் இட்லிக்கு தேங்காய் சட்னி, சாம்பார், காரா சட்னி, வேர்க்கடலை சட்னி செய்து போர் அடித்து விட்டதா. வாங்க இந்த வெயிலுக்கு குளுகுளுன்னு சூப்பரான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் சட்னி செய்யலாம். இந்த சட்னி செய்ய 10 நிமிடங்கள் இருந்தா போதும்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் - 1
வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
ப.மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு (விருப்பப்பட்டால்)
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
செய்முறை :
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். நறுக்கியதில் இரண்டு துண்டை தனியாக எடுத்து பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்.
வறுத்த வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடங்கள் மிதான தீயில் வறுத்து ஆறவிடவும்.
அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெள்ளரிக்காய் போட்டு மிதமான தீயில் வதக்கவும். அடுத்து அதில் பூண்டு, ப.மிளகாய் போட்டு பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கி ஆற விடவும்.
மிக்சிஜாரில் வதக்கிய அனைத்தையும் போட்டு (வேர்க்கடலை, வெள்ளரிக்காய் தவிர) அதனுடன் புளி, உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
அனைத்தும் நன்கு அரைபட்டதும் இப்போது வேர்க்கடலை சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக வெள்ளரிக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த சட்னியை ஒரு பௌலில் மாற்றி அதில் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காயை போட்டு நன்றாக கலந்து பரிமாறவும். இது ஒரு நல்ல சுவையையும் புத்துணர்ச்சியையும் தரும்.
இப்போது சத்தான சுவையான ஆந்திரா ஸ்டைல் வெள்ளிக்காய் சட்னி ரெடி. இதை தோசை, இட்லியுடன் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.
வெள்ளரிக்காய் பயன்கள் :
வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து கொண்ட ஒரு சத்தான பழமாகும். வெள்ளரிக்காய் சாப்பிடுவது இரத்த சர்க்கரையை குறைக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், எடை இழப்பை ஆதரிக்கவும் உதவும். வெள்ளரிக்காயின் ஆரோக்கிய நன்மைகளை அதிகரிக்க, தோலையும் சாப்பிடுங்கள். பொதுவாக காய்கறி என்று கருதப்பட்டாலும், வெள்ளரிக்காய் ஒரு பழமாகும். உணவுக்கு முன் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உங்களுக்கு வயிறு நிரம்பியதாக உணர உதவும், மேலும் பிரதான உணவின் போது உட்கொள்ளும் கலோரிகளின் அளவைக் குறைக்கும்.