
குழந்தைகளுக்கு கடைகளில் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் பழங்களை வைத்து ஐஸ்கிரீம் செய்து கொடுக்கலாம். அந்தவகையில் இந்த கோடை வெயிலுக்கு தர்பூசணி, வாழைப்பழம் வைத்து இரண்டு சூப்பரான ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
1. வாழைப்பழ சாக்கோ சிப்ஸ் ஐஸ்கிரீம் :
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் - 2
பாதாம் - 10
முந்திரி - 10
பேரீச்சம் பழம் - 4
தேன் - 2 டீஸ்பூன்
கோகோ பவுடர் - கால் டீஸ்பூன்
பால் - சிறிதளவு
சாக்கோ சிப்ஸ் - தேவையான அளவு
செய்முறை :
வாழைப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி 5 மணிநேரம் பிரிட்ஜில் வைக்க வேண்டும். அல்லது முதல் நாள் இரவே வைக்கலாம்.
பாதாம், முந்திரியை ஊறவைத்து கொள்ளவும்.
ஒரு மிக்சி ஜாரில் ஃப்ரீஸான வாழைப்பழம், ஊறவைத்த பாதாம், முந்திரி, தேன், பேரீச்சம் பழம் (கொட்டையை நீக்கி விட்டு சேர்க்கவும்), பால், கோகோ பவுடர் சேர்த்து திக்கான பேஸ்ட் பதத்தில் அரைத்து கொள்ளவும்.
அரைத்ததை ஒரு டப்பாவில் போட்டு அதன் மேல் சாக்கோ சிப்ஸ் அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு ஏதாவதும் டாப்பிங்ஸ் தூவி பிரீசரில் இரவு முழுவதும் வைக்கவும்.
காலையில் பிரீசரில் இருந்து வெளியில் எடுத்து வைத்து சிறிதுநேரம் கழித்து ஸ்குப்பில் எடுத்து கிண்ணத்தில் வைத்து அதன் மேல் சாக்லேட் துருவல், பழங்கள் அல்லது சாக்கோ சிரப் டாப்பிங்ஸ் செய்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான வாழைப்பழ சாக்கோ சிப்ஸ் ஐஸ்கிரீம் ரெடி.
2. தர்பூசணி ஐஸ்கிரீம் :
தேவையான பொருட்கள் :
தர்பூசணி பழம் - 1
பிரஷ் கிரீம் - அரை கப்
கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
செய்முறை :
தர்பூசணியை இரண்டாக வெட்டி அதன் உள்ளே இருக்கும் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும். பின்னர் சதை பகுதியில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு மிக்சியில் போட்டு அதனுடன் கண்டன்ஸ்டு மில்க், பிரஷ் கிரீம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்ததை வடிகட்டியில் நன்றாக வடிகட்டி கொள்ளவும்.
பின்னர் வெட்டி வைத்த தர்பூசணி பழத்தில் (பழத்தில் இருந்து சதையை எடுத்த பின்னர் காலியாக இருக்கும்) இந்த அரைத்த ஜூஸை ஊற்றி பிரீசரில் இரவு முழுவதும் வைத்திருக்கவும்.
காலையில் தர்பூசணி பழத்தை எடுத்து பழத்தை வெட்டுவது போல் வெட்டி அதன் மீது சாக்கோ சிப்ஸ் அங்காங்கே வைத்து பரிமாறவும். இப்படி செய்யும்போது சாக்கோ சிப்ஸ் தர்பூசணி விதைகள் போல் தெரிவதால் ஒரிஜினல் தர்பூசணி பழம் போல் தெரியும்.
இப்போது சூப்பரான தர்பூசணி ஐஸ்கிரீம் ரெடி.
இந்த ஐஸ்கிரீமை குழந்தைகளுக்கு கொடுத்தால் ஐஸ்கிரீமாக அல்லது தர்பூசணியா என்று தெரியாது. சாப்பிட்ட பிறகு தான் தெரியும். இது தர்பூசணி இல்லை ஐஸ்கிரீம் என்று!