
எவ்வளவுதான் நாம் கடையில் வாங்கித் தந்தாலும் வீட்டில் செய்யும் ஸ்வீட் வகைகள் ஆரோக்கியத்துடன் நாமே செய்தோம் எனும் மனநிறைவையும் சந்தோஷத்தையும் தருகிறது. வரிசையாக களைக்கட்டும் பண்டிகைகளுக்கு நமது வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில இனிப்பு வகைகளை இங்கு காண்போம்.
ஹெல்தி தேங்காய் புட்டிங்
தேவை:
தேங்காய் துருவல் - 3 சிறிய கப்
இளநீர்- 1 கப்
சர்க்கரை- 1 கப்
முந்திரி- 12
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
செய்முறை:
வெள்ளையாக துருவிய தேங்காய் துருவலுடன் இளநீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி முதல் தேங்காய் பால் எடுக்கவும். இதனுடன் சர்க்கரை சோளமாவு சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். சோளமாவு இருப்பதால் எளிதில் கட்டியாகும் கவனமாக கிளறுங்கள். கலவை கட்டிப்பட்டு வரும்போது அடுப்பை அணைத்து கலவையை பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி பிரிட்ஜில் வைத்து எடுத்து அதன் மேல் வெண்ணையில் பொடித்த முந்திரி சேர்த்து சிவக்க வறுத்து தூவி பரிமாறவும்.
ஸ்பான்ச் டீ கேக்
தேவை:
மைதா - 1 கப்
பேக்கிங் சோடா -1 டீஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
பால் - 1 சிறிய கப்
எண்ணெய்- 2 ஸ்பூன்
வெண்ணெய்- 100 கிராம்
கன்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்
செய்முறை:
மைதா, பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இருமுறை சலிக்கவும். வெண்ணெய் தடவி தயாராக வைக்கவும் அகலமான கிண்ணத்தில் வெண்ணெயுடன் எண்ணெய் வெண்ணிலா எசன்ஸ், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து மரக்கரண்டியால் நன்கு கலக்கவும். அதில் சலித்த மைதா கலவையை சேர்த்து நன்கு கலந்து வெண்ணெய் தடவிய டிரேயில் ஊற்றி அவனில் வைக்கவும். 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 45 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். அவன் இல்லை என்பவர்கள் குக்கரில் உப்பு பரப்பியும் வைத்து எடுக்கலாம். ஆனால் 45 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
சிம்பிள் கேரட் ஐஸ்கிரீம்
தேவை:
கேரட் - 4
காய்ச்சிய கெட்டிப்பால் பால் - 1 கப் சர்க்கரை- 1/4 கப்
பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10
ஏலக்காய்த் தூள் -1/2 டீஸ்பூன்
செய்முறை:
கேரட்டின் தோலை சீவி துருவி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின்னர் அதை ஆறவிட்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். இதனுடன் பால் சேர்த்து கலந்து அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக்கிளறவும். இரண்டு கொதி வந்ததும் இறக்கி ஆறவைத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி சிறிய கிண்ணங்களில் ஊற்றி இரண்டு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்திருந்து எடுத்து அதில் உள்ள கலவையை மீண்டும் மிக்ஸியில் போட்டு மறுபடியும் ஒருமுறை சுற்றி மேலாக பொடித்த பாதாம், பிஸ்தா துருவலை சேர்க்கவும்.
முந்திரியை பொடித்து வறுத்தும் சேர்க்கலாம். கிண்ணங்களை மீண்டும் ப்ரீஸரில் வைத்து சில மணிநேரம் கழித்து ஐஸ்கிரீம் பதத்திற்கு வந்ததும் எடுத்து பரிமாறலாம். இது செயற்கை வண்ணங்கள் சேர்க்காத ஹெல்த்தியான ஐஸ்கிரீம்.
இதே முறையில் குழந்தைகள் விரும்பும் காய்களை சேர்த்து வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வது ஆரோக்கியம் தரும்.