வாழைப்பூ சாப்பிடுவதால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை தீரும். குதிரைவாலி அரிசி எலும்பை வலுப்படுத்தும். முருங்கை கீரையில் இரும்புச்சத்து உள்ளது. அது முடிவளர்ச்சிக்கு நல்லதாகும். இப்படி இந்த அடையில் பயன்படுத்தும் பொருட்களில் நிறைய சத்துக்கள் இருக்கின்றது. ஒரு அடை சாப்பிட்டாலே போதும் வயிறு நிறைந்து விடும். உடலுக்கும் மிகுந்த ஆரோக்கியமாகும். அத்தகைய வாழைப்பூ மில்லட் அடையை எப்படி வீட்டிலேயே செய்யலாம்ன்னு பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ- 1 கைப்பிடி அளவு.
குதிரைவாலி அரிசி-1 கப்.
துவரம்பருப்பு-2 தேக்கரண்டி.
கடலைபருப்பு-2 தேக்கரண்டி.
பாசிப்பருப்பு-2 தேக்கரண்டி.
அரிசி-2 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய்-5
சீரகம்-1/2 தேக்கரண்டி.
துருவிய கேரட்-1 கப்.
துருவிய தேங்காய்-1 கப்.
நறுக்கிய வெங்காயம்- 1கப்.
முருங்கை இலை-1 கைப்பிடியளவு.
உப்பு- தேவையான அளவு.
மஞ்சள் தூள்- சிறிதளவு.
பெருங்காய தூள்- சிறிதளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கைப்பிடி அளவு வாழைப்பூ எடுத்து அதிலிருக்கும் நரம்புகளை நீக்கி சுத்தப்படுத்தி வைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு பவுலில் 1 கப் குதிரைவாலி அரிசி, 2 தேக்கரண்டி துவரம் பருப்பு, 2 தேக்கரண்டி கடலைபருப்பு, 2 தேக்கரண்டி பாசிப்பருப்பு, 2 தேக்கரண்டி அரிசி, காய்ந்த மிளகாய் 5, சீரகம் ½ தேக்கரண்டி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் நன்றாக ஊர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் வாழைப்பூவையும் கொரகொரப்பாக அரைத்து சேர்த்து கொள்ளவும். அத்துடன் 1 கப் கேரட், 1கப் துருவிய தேங்காய்,பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 கப், இப்போது ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரை சேர்த்து கொள்ளவும். அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.
இப்போது இவை அனைத்தையும் நன்றாக கலக்கி கொள்ளவும். தோசைக்கல் நன்றாக சூடானதும் அடைப்போல ஊற்றி எண்ணெய் விட்டு நன்றாக வேகவிடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக ஆகும் வரை நன்றாக வேகவைத்து எடுக்கவும். இப்போது மொறு மொறுப்பான வாழைப்பூ மில்லட் அடை தயார். தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். நீங்களும் வீட்டில் ஒருமுறை செய்து பார்த்துட்டு ஆனந்தமா வீட்ல இருக்குறவங்களுக்கும் பரிமாறுங்க.