
1. ருசியான பீட்ரூட் குழாப் புட்டு:
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 கப்
பீட்ரூட் - 1
தேங்காய் துருவல் - 1/2 கப்
சர்க்கரை - ருசிக்கேற்ப
உப்பு - தேவையானது
செய்முறை :
பீட்ரூட்டை தோல் நீக்கி துண்டுகளாக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் பச்சரிசி மாவைப் போட்டு சிறிது சூடாகும் வரை வறுத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசி மாவு, அரைத்த பீட்ரூட், உப்பு தேவையான அளவு, சர்க்கரை அரை ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு தேவையான அளவு சூடான வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவை உதிர் உதிராக வரும் வரை பிசிறி விடவும். கையால் பிடித்தால் பிடிக்க வரவேண்டும் உதிர்த்து விட்டால் உதிர்ந்து விழும் பக்குவத்தில் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
குழா புட்டு செய்யும் பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள குழாயில் சிறிது தேங்காய் துருவல் முதலில் தூவி பிறகு கலந்து வைத்த பச்சரிசி மாவை போட்டு மாற்றி மாற்றி அடைத்து குழாப் புட்டு பானையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
மிகவும் சாஃப்டான கலர்ஃபுல் குழாப் புட்டு தயார். இதனுடன் சர்க்கரை, பொரித்த பப்படம், வாழைப்பழம், வேகவைத்த பச்சைப்பயிறு, கடலைக்கறி போன்றவற்றை நம் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
2. தாளிச்ச இட்லி:
எப்போதும் இட்லி, தோசை என சாப்பிடுவதற்கு பதில் மாறுதலாக இந்த தாளிச்ச இட்லியை செய்து ருசிக்க அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
வெங்காயம் - 1
கேரட் துருவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது
உப்பு - சிறிது
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் ரெண்டு ஸ்பூன் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கேரட் துருவல் மூன்றையும் சேர்த்து வதக்கி இட்லி மாவில் கொட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியும் சேர்த்து கிளறவும்.
இட்லி குக்கரில் தண்ணி விட்டு அடுப்பில் வைத்து தண்ணீர் கொதிக்கும் பொழுது இட்லி தட்டில் மாவை ஊற்றி வேகவிட்டு எடுக்க மிகவும் ருசியான கலர்ஃபுல் தாளிச்ச இட்லி தயார். இதற்கு இட்லி பொடி, பீட்ரூட் சட்னி பொருத்தமாக இருக்கும்.
3. பீட்ரூட் சட்னி:
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். அத்துடன் நறுக்கிய பீட்ரூட், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். கடைசியாக தேங்காய் துருவலையும் கொத்தமல்லியையும் போட்டு கலந்து இறக்கவும். சிறிது ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்தெடுக்க மிகவும் ருசியான கலர்ஃபுல் பீட்ரூட் சட்னி தயார்.