
சிவப்பு அவல் கொழுக்கட்டை:
தேவை:
சிவப்பு அவல் – ஒன்றரை கப்,
வேகவைத்த பாசிப்பருப்பு, வேகவைத்த கடலைப்பருப்பு – தலா கால் கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க -
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை:
சிவப்பு அவலை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, துருவிய இஞ்சி, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, வேகவைத்த பருப்புகளை சேர்த்துக்கிளறி, அவலையும் சேர்த்து நன்கு கிளறவும்.
கையில் சிறிது எண்ணெய் தடவி, அவல் கலவையை எடுத்து, விரும்பிய வடிவில் கொழுக்கட்டைகளாக செய்து, 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
இந்த கொழுக்கட்டைக்கு மேலே டிரை ஃப்ரூட்ஸ் தூவி பரிமாறலாம்.
*****
சிவப்பு அவல் உப்புமா
தேவை:
சிவப்பு அவல் - 200 கிராம்,
இளநீர் - 1,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 1,
இஞ்சி - 1 துண்டு,
மிளகு - 10,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - சிறிது,
நல்லெண்ணெய் - சிறிது,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அவலை சுத்தம் செய்து, இளநீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, மிளகு, சீரகம், இஞ்சி போட்டு தாளித்த பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
கடைசியாக இளநீரில் ஊற வைத்த அவலையும், உப்பையும் சேர்த்துப் பிரட்டி, கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும். சுவையான சிவப்பு அவல் உப்புமா தயார்.
*******
சிவப்பு அவல் பிரியாணி
தேவை:
சிவப்பு அவல் - ஒரு கப், முள்ளங்கி துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
முட்டைகோஸ் துருவல்,
கேரட் துருவல் - தலா கால் கப்,
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்),
நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - கால் கப்,
மிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன்,
தேங்காய்ப் பால் - தேவையான அளவு,
பட்டை, கிராம்பு - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு, புதினா
செய்முறை:
தேங்காய்ப் பாலில் சிவப்பு அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, புதினா தாளித்து, அனைத்து காய்கறிகளை துருவல்களையும் சேர்த்து உப்பு, மிளகு - சீரகப்பொடி, பட்டை, கிராம்பு சேர்த்து, இதனுடன் ஊற வைத்த சிவப்பு அவலைக் கலந்து கிளறி பரிமாறவும். சுவையான சிவப்பு அவல் பிரியாணி ரெடி.
******
சிவப்பு அவல் உருண்டை
தேவை:
சிவப்பு கைக்குத்தல் அவல் – ஒரு கப்,
பல்லாக நறுக்கிய தேங்காய் – ஒரு டீஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வதக்கவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
பாகு வெல்லம் – முக்கால் கப்,
வெண்ணெய் – அரை டீஸ்பூன்,
நெய், எண்ணெய் – தலா 50 கிராம்.
செய்முறை:
நெய், எண்ணெயை ஒன்றுசேர்த்து வாணலியில் ஊற்றி சூடாக்கவும். அதில் சுத்தம் செய்த சிவப்பு அவலை சேர்த்து, நன்கு பொரித்து எடுக்கவும். ஏலக்காய்த்தூள், நெய்யில் வதக்கிய தேங்காயை பொரித்த அவலுடன் கலந்து, வெண்ணெய் சேர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். பாகை அவல் கலவையில் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான சத்தான சிவப்பு அவல் உருண்டை தயார்.