
நாவிற்கு சுவையான கேரட் ஜூஸ் மைசூர் பாக்கும், வத்தல், கார குழம்புகளுக்கு ஏற்ற பச்சை பட்டாணி கோவக்காய் கூட்டு, சீசனில் கிடைக்கும் காய்கறிகளைக் கொண்டு அழகாக இனிப்பு ,கார வகைகளை செய்து அசத்தலாம். விலையும் மலிவாக இருக்கும். செய்வதும் எளிதாக இருக்கும் .அனைவரும் விரும்பும்படியும், ரசித்து உண்ணும்படியும் இருக்கும் கேரட் ஜூஸ் மைசூர் பாகு செய்யும் விதத்தை இப்பதிவில் காண்போம்.
கேரட் ஜூஸ் மைசூர்பாக் செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மற்றும் பயத்த மாவு இரண்டும் கலந்தது- 300 கிராம்
கேரட் ஜூஸ் -600 மில்லி கிராம்
சர்க்கரை- 800 கிராம்
நெய்- 800கிராம்
செய்முறை:
கேரட் ஜூஸில் சர்க்கரையை போட்டு பாகு காய்ச்சவும். லேசாக வறுத்து ரெடியாக இருக்கும் மாவுகளை பாகில் கொட்டி கட்டித் தட்டாமல் நன்கு கிளறவும். கிளறிக் கொண்டே அடிக்கடி நெய் விட்டு மிதமான தீயில் மைசூர் பாகு ரெடி ஆகும்வரை கைவிடாமல் கிளறவும். ரெடியானவுடன் சிறிது மாவை எடுத்து உருண்டை பிடித்து பார்த்தால், உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்திருந்தால் மைசூர் பாகு ரெடி என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்பொழுது ஒரு தாம்பாளம் அல்லது ட்ரேயில் நெய் தடவி மைசூர் பாகை அதில் கொட்டி டபராவால் நன்றாக பரவிவிட்டு இரண்டு -மூன்று மணி நேரம் ஆறவிடவும். பின்னர் அழகாக விரும்பிய அளவுக்கு துண்டுகள் போட்டு எடுத்து வைக்கவும். சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். கலர்ஃபுல்லாக இருக்கும் .இதை அனைவரும் விரும்பி உண்பர்.
பச்சை பட்டாணி, கோவைக்காய் கூட்டு
செய்யத் தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி- ஒரு கப்
கோவைக்காய் அரிந்தது- ஒன்னரை கப்
பீன்ஸ்- 10 எண்ணிக்கை அரிந்தது
தேங்காய்த் துருவல்- ரெண்டு டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி- ஒரு டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் -ஒன்று அரிந்தது
கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் போன்றவை- தாளிக்கத் தேவையான அளவு
உப்பு- ருசிக்கு ஏற்ப.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கி அதில் சாம்பார்பொடி சேர்த்து கிளறி, அரிந்து வைத்த காய்கறிகளை ஒன்றாகப்போட்டு கிளறிவிட்டு தேவையான அளவு உப்பு போட்டு, அரைத்த தேங்காய் துருவலை அதில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுக்கவும்.
வித்தியாசமான ருசியில் மிகவும் எளிமையான ரெசிபி இது. சாப்பிட ருசியாக இருக்கும். வத்தல் குழம்பு, கறிவேப்பிலை குழம்பு, பூண்டு வெங்காய குழம்பு, இவை எல்லாவற்றையும் ஒன்றாக செய்த குழம்பு என்று எதற்கு தொட்டுக்கொண்டாலும் நல்ல மேட்ச் ஆக இருக்கும். கோவக்காய் உடன் பச்சை பட்டாணி சேர்வதால் அனைவரும் விரும்பி உண்பர். சீசனில் செய்து அசத்துங்க.