
ஊறுகாய்களில் அதிக சுவையுடையதும் மணம் மிக்கதும் பூண்டு ஊறுகாய்தான். பூண்டு ஊறுகாய்க்கு எப்போதும் அதிக விரும்பிகள் உண்டு. புளிப்பு சுவை பிடிக்காதவர் களின் முதல் தேர்வாக பூண்டு ஊறுகாய் இருக்கிறது. இந்த ஊறுகாயின் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால், இதை மட்டுமே சாதத்தில் பிசைந்து சாப்பிட முடியும். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். மற்ற ஊறுகாயை சாதம் தவிர வேறு எதற்கும் தொட்டுக்கொள்ள முடியாது. பூண்டு ஊறுகாயை வீட்டில் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள் (Ingredients for garlic pickle)
பூண்டு - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 100 கி
மல்லித்தூள் - 50 கி( தேவைப்பட்டால்)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வற மிளகாய் - 5
வெந்தயம் - 1 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
வெள்ளை உளுந்து - 2 டீஸ்பூன்
ஊற வைத்த கொண்டைக் கடலை -2 டீஸ்பூன் ( தேவைப்பட்டால்)
புளிக் கரைசல் - ஒரு கப்
நல்லெண்ணெய் - 2 மேஜை கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
ஊறுகாய் செய்வது எப்படி? (How to make garlic pickle at home?)
முதலில் பூண்டின் தோல்களை நீக்கவேண்டும். பெரிய பூண்டாக இருந்தால் இரண்டாக நறுக்கி கொள்ளலாம். அடுப்பில் ஒரு வாணலியை இட்டு அதில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, வெந்தயம், வற மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் போட்டு தாளிக்கவும். சிலர் வற மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயை போடுவார்கள் பச்சை மிளகாய் தனிச்சுவையை தரும். பின்னர் பூண்டு, புளிக்கரைசல், கொண்டைக்கடலை எல்லாம் போட்டு வதக்கவும்.
2 நிமிடம் கழித்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளிக்கரைசல் எல்லாம் சேர்த்து வதங்க விடவும். அதிக காரம் பிடிக்காதவர்கள் மல்லித்தூள் விருப்பத்தின் பெயரில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சேர்க்காமல் கூட இருக்கலாம். இதனுடன் இஞ்சி விழுதையும் சேர்த்துக்கொள்ளவும்.
விருப்பத்தில் பேரில் பூண்டினை முழுதாகவோ அல்லது இரண்டாக நறுக்கியும் அல்லது கீறியும் போடலாம். மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் வரை வதங்க விடவேண்டும். பூண்டு நன்றாக வெந்ததும் எண்ணெய் பிரிந்து வரும், அப்போது வாணலியை இறக்கிவிடலாம். ஆறியதும் ஊறுகாயை பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடிக் குடுவையில் வைக்கலாம். இரண்டு நாட்கள் கழித்து 2-5 மணி நேரம் வரை வெயிலில் வைத்து பயன்படுத்தலாம்.
பூண்டு ஊறுகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
பூண்டு ஊறுகாய் வாயுத் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தும். ஹார்மோன் சமநிலையில் பங்கு வகிக்கிறது. எலும்பு அடர்த்தியை அதிகரிக்க செய்து மூட்டு வலியை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நைட்ரிக் ஆசிட் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இன்சுலின் உணர் திறனை மேம்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. தினசரி பூண்டு ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பிரச்னைகள் குறைவாகவே இருக்கிறது. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுவாக்குகிறது.
பூண்டு ஊறுகாயின் தீமைகள்:
நன்மைகள் இருந்தாலும் ஊறுகாயை அதிகளவு பயன்படுத்தினால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பூண்டு இதயத்திற்கு நன்மை செய்தாலும், ஊறுகாயில் உள்ள உப்பும் எண்ணெய்யும் இரத்த அழுத்தத்தை உண்டு பண்ணும். இதயநோய் உள்ளவர்களும் இரைப்பப் புண் உள்ளவர்களும் காரம் நிறைந்த பூண்டு ஊறுகாயை தவிர்ப்பது நல்லது. எப்போதாவது ஆசை என்றால் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிடுவதால் எந்த தீமையும் இல்லை. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டும் அதிகமாக சாப்பிடுவதும், தினசரி எடுத்துக் கொள்ளவும் வேண்டாம்.