

முருங்கைக்காயில் எப்போது குழம்பு, பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று முருங்கைக்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்காய் - 15
கடுகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
காஷ்மீரி காய்ந்த மிளகாய் - 5
காய்ந்த மிளகாய் - 5
நீட்டு காய்ந்த மிளகாய் - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கட்டி பெருங்காயம் - சிறிது துண்டு
கல் உப்பு - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
வினிகர் - கால் கப்பில் பாதியளவு
முருங்கைக்காய் - 2 (இரண்டாக வெட்டி சிறிய துண்டுகளாக வெட்டியது)
புளி - சிறிய ஆரஞ்சு பழ அளவு
வெல்லம் - 1 டீஸ்பூன்
தாளிக்க :
நல்லெண்ணெய்- 75 Ml
கடுகு எண்ணெய் - 50 ML
நாட்டு பூண்டு- 20 பல்
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
முருங்கைக்காயை தோல் சீவி, கழுவி துண்டுகளாக நறுக்கி, இட்லி தட்டில் 10 நிமிடங்கள் வேக வைத்து ஆறியதும் அதில் உள்ள சதை பகுதியை மட்டும் ஸ்பூனை வைத்து சுரண்டி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* வெறும் கடாயில் கடுகு, வெந்தயம் போட்டு சிறிது நேரம் வறுபட்டதும், அடுத்து அதில் சீரகம், தனியா, சோம்பு போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* காஷ்மீரி காய்ந்த மிளகாய், குண்டு காய்ந்த மிளகாய், நீட்டு காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
* அடுத்து கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கட்டி பெருங்காயத்தை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
* வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
* அரைத்த பவுடரை வேகவைத்த முருங்கைக்காயில் சேர்த்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், வினிகர் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
* புளியை 1 மணிநேரம் ஊறவைத்து திக்காக கரைத்து வடிகட்டி வைக்கவும்.
* அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுக்கப்பட்டு பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெட்டி வைத்த முருங்கைக்காயை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
* பின்னர் கரைத்த வைத்துள்ள புளியை சேர்த்து ஒரு கொதி வந்ததும், வேகவைத்த முருங்கைக்காய் மசாலாவை போட்டு நன்றாக கலந்து கலக்கவும்.
* நன்றாக கலந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெல்லம் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் நன்றாக கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
* கடைசியாக டார்க் கலரில் வரும்போது இறக்கி ஆறியதும் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்கவும்.
* இப்போது சூப்பரான முருங்கைக்காய் ஊறுகாய் ரெடி.
இந்த ஊறுகாய் பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் ஆறுமாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. அதுவே வெளியில் வைத்தால் மூன்று மாதங்கள் வரை கெட்டுப்போகாது. இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம், தயிர் சாதத்துடன் என எதனுடன் வேண்டுமானாலும் பிசைந்து சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும்.
ஒருமுறை செஞ்சி பாருங்க. அப்புறம் விடவே மாட்டீங்க...