ஓட்ஸ் கஞ்சியா குடிச்சு போர் அடிக்குதா? 10 நிமிடத்தில் சுவையான கார பணியாரம் ரெடி!

சாதாரண கஞ்சி குடித்து சலித்துவிட்டதா? மொறுமொறுப்பான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் பணியாரம் வீட்டிலேயே 10 நிமிடங்களில் சுலபமாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
oats paniyaram recipe ஓட்ஸ் பணியாரம்
oats paniyaram recipe ஓட்ஸ் பணியாரம்
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ஓட்ஸ் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம். அதில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் இருப்பதால் மருத்துவர்களும் இதை அதிகம் பரிந்துரைக்கின்றனர். ஆனால், அதை தினமும் பாலில் கலந்தோ அல்லது சாதாரண கஞ்சியாகவோ குடிக்க பலரும் விரும்புவதில்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு ஓட்ஸ் என்றால் அறவே பிடிக்காது. 

அப்படிப்பட்டவர்களுக்கு ஓட்ஸை வைத்து முற்றிலும் வித்தியாசமான, மொறுமொறுப்பான தென்னிந்திய உணவாக செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இது சுவைக்கு மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. எந்தவிதமான செயற்கை பொருட்களும் இல்லாமல், காய்கறிகள் சேர்த்து இதை எப்படி 10 நிமிடங்களில் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் - 1 கப்

  • ரவை அல்லது அரிசி மாவு - 1/4 கப்

  • புளிக்காத தயிர் - 1/2 கப்

  • பெரிய வெங்காயம் - 1

  • பச்சை மிளகாய் - 2

  • இஞ்சி - 1 சிறிய துண்டு

  • துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்

  • கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

  • சமையல் எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு

oats paniyaram recipe ஓட்ஸ் பணியாரம்
oats paniyaram recipe ஓட்ஸ் பணியாரம்

செய்முறை! 

முதலில் ஒரு அடி கனமான வெறும் கடாயில் ஓட்ஸை மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். ஓட்ஸ் லேசாக நிறம் மாறி வாசம் வரும் வரை வறுப்பது அவசியம். வறுத்த ஓட்ஸை நன்றாக ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பான பொடியாக அரைத்து எடுக்கவும். 

இப்போது அரைத்த ஓட்ஸ் பொடியுடன் ரவை அல்லது அரிசி மாவு, புளிக்காத கெட்டித் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கட்டிகள் இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும். ரவை அல்லது அரிசி மாவு சேர்ப்பதால், பணியாரம் அதிக நேரம் மொறுமொறுப்பாகவும் கரகரப்பாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பணம் நிக்காம செலவாகுதா… இந்த 1 பொருள் உங்க கஷ்டத்தை ஈஸியா தீர்க்கும்!
oats paniyaram recipe ஓட்ஸ் பணியாரம்

ஓட்ஸ் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால், இந்த மாவு ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே ஊறட்டும்.

மாவு ஊறும் அந்த நேரத்திற்குள், அடுப்பில் ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பருப்பு பொன்னிறமானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். காய்கறிகளின் சத்துக்களை இன்னும் அதிகரிக்க விருப்பமுள்ளவர்கள், இந்த நேரத்தில் துருவிய கேரட் சேர்த்து வதக்கலாம். 

வெங்காயம் லேசாக வதங்கியதும், இந்த கமகமக்கும் தாளிப்பை அப்படியே நாம் தயார் செய்து வைத்துள்ள மாவில் கொட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் தூவி ஒரு கரண்டியால் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். மாவு ரொம்பவும் கெட்டியாக இருந்தால் மட்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
பொட்டுக்கடலையில் இவ்வளவு சுவையான உணவுகளா? மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!
oats paniyaram recipe ஓட்ஸ் பணியாரம்

மாவு தயாரானதும் குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் விட்டு சூடாக்க வேண்டும். கல் காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை முக்கால் குழிக்கு ஊற்றி ஓட்ஸ் பணியாரம் சுட்டெடுக்க வேண்டும். அதிக தீயில் வைத்தால் வெளியே கருகி உள்ளே வேகாது. ஒருபுறம் வெந்து பொன்னிறமாகச் சிவந்ததும், ஒரு சிறிய ஸ்பூன் அல்லது மரக்குச்சியை வைத்து மெதுவாகத் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிடவும். 

இரண்டு பக்கமும் மொறுமொறுப்பாக வெந்ததும் தட்டில் எடுத்து சூடாகப் பரிமாறலாம். காரசாரமான தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியோடு சேர்த்துத் தொட்டுச் சாப்பிட்டால் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த காரசாரமான ஓட்ஸ் பணியாரம் ஒரு சிறந்த காலை உணவாகும். இதை இன்றே உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com