

mango nannari sarbath: பொதுவாகவே மாம்பழத்தை அப்படியே வெட்டிச் சாப்பிடுவதும், ஜூஸ் போட்டுக் குடிப்பதும் வழக்கம். ஆனால், வழக்கமான ஜூஸ் வகைகளை விடச் சற்று வித்தியாசமாக, தாகத்தைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடிய ஒரு பானம் என்றால் அது சர்பத் தான்.
நன்னாரியின் மணமும், சப்ஜா விதைகளின் குளிர்ச்சியும், மாம்பழத்தின் தித்திக்கும் சுவையும் ஒன்றாகச் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அதுதான் 'மாம்பழ சர்பத்'. எந்தப் பெரிய ஜூஸ் கடைகளுக்கும் செல்லாமல், மிகக் குறைந்த செலவில் வீட்டிலேயே இந்த அசத்தலான சர்பத்தை எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த மாம்பழம் - 1
சப்ஜா விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
நன்னாரி சர்பத் - 3 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
குளிர்ந்த நீர் - 2 டம்ளர்
புதினா இலைகள் - சிறிதளவு
சர்க்கரை - தேவைப்பட்டால் மட்டும்
செய்முறை!
மாம்பழ சர்பத் செய்வதற்கு முதல் படியாக, மாம்பழக் கூழைத் தயார் செய்ய வேண்டும். நன்கு பழுத்த, நார் இல்லாத மாம்பழத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் தோலைச் சீவிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். நறுக்கிய துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, தண்ணீர் எதுவும் ஊற்றாமல் நல்ல நைஸான பேஸ்ட் போல அரைத்துத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது சர்பத் பரிமாறப் போகும் ஒரு பெரிய கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் நாம் அரைத்து வைத்துள்ள திக்கான மாம்பழக் கூழில் இருந்து 3 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளவும். புளிப்புச் சுவையை பேலன்ஸ் செய்ய ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் இனிப்புக்காக நன்னாரி சர்பத் ஊற்றவும். இதனுடன், உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடிய ஊறவைத்த சப்ஜா விதைகளை இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக, டம்ளர் நிறையக் குளிர்ந்த நீரை ஊற்றி, அதில் சில ஐஸ் கட்டிகளைப் போட்டு, ஒரு நீண்ட ஸ்பூனை வைத்து அனைத்துப் பொருட்களும் நன்றாகக் கலக்கும்படி அடிமட்டத்திலிருந்து கலந்து விடுங்கள். மேலே சில புதினா இலைகளைப் போட்டு அலங்கரித்தால், பார்ப்பதற்கே நாவில் எச்சில் ஊறவைக்கும் கமகமக்கும் 'மாம்பழ சர்பத்' தயார்.
வெயிலில் வெளியே சென்றுவிட்டு சோர்வாக வீடு திரும்புபவர்களுக்கு, இந்த ஜில்லென்ற சர்பத்தைக் கொடுத்துப் பாருங்கள், அவர்களின் சோர்வு உடனே பறந்துவிடும். இந்த மாம்பழ சீசன் முடிவதற்குள் இந்த வித்தியாசமான ரெசிபியை உங்கள் வீட்டில் கட்டாயம் முயற்சி செய்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.