
1. பஞ்சாபி மஷ்ரூம் மசாலா ரெசிபி
தேவையான பொருட்கள்:
பட்டன் மஷ்ரூம் 400 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 3
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 2 பல்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
லவங்கம் - 2
பட்டை - ஒரு துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 1
தனியா பவுடர் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - ½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
செய்முறை:
வெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் பொடிசாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு ஆற வைத்து தோலை உரிக்கவும். உரித்தெடுத்த தக்காளிகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டுகளை சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் தக்காளிக் கரைசலை ஊற்றவும்.
கொதித்து வந்ததும் அதில் தனியா பவுடர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா பவுடர் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். காளான்களை நன்கு கழுவி, இரண்டிரண்டாய் நறுக்கி சேர்க்கவும். காளான்கள் மிருதுவாக வேகவும், கிரேவி தகுந்த பக்குவம் பெறவும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். காளான் நன்கு வெந்து, மசாலா கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். மல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
2. மார்வாடி லேசன் சட்னி ரெசிபி
தேவையான பொருட்கள்
பூண்டுப் பற்கள் - 25
சிவப்பு மிளகாய் - 10
மஸ்டர்ட் ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சிவப்பு மிளகாய்களை கொதிக்கும் நீரில் போட்டு பத்து நிமிடம் கொதிக்கவிட்டு எடுத்து ஐஸ் வாட்டரில் போடவும். பின் அதை மிக்ஸியில் போட்டு அதனுடன் பூண்டுப் பற்களை சேர்த்து அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் மற்றும் பெருங்காயத்தூளைப் போடவும். அதனுடன் அரைத்து வைத்த பூண்டு-மிளகாய் பேஸ்ட்டை கொட்டி, பச்சை வாசனை போகும் வரை கிளறி இறக்கவும்.
காரசாரமான லேசன் சட்னி தயார்.