நாம் வீடுகளில் பொதுவாகவே வழக்கமான உருளைக்கிழங்கு பொரியல், காரக்கறி அல்லது குருமா தான் செய்வோம். ஆனால், இந்தியாவைத் தாண்டி, குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள பிரிட்டிஷ்-இந்திய ரெஸ்டாரண்ட்களில் மிகவும் பிரபலமான ஒரு உணவுதான் இந்த பாம்பே உருளைக்கிழங்கு.
பார்ப்பதற்கு மிகவும் காரசாரமாகவும், சாப்பிடும்போது வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போலவும் இருக்கும் இந்த உணவு, முற்றிலும் வீகன் மற்றும் க்ளூட்டன் ஃப்ரீ உணவாகும். வேகவைத்த பேபி உருளைக்கிழங்குகளை, வெங்காயம், தக்காளி, கமகமக்கும் மசாலாக்களுடன் சேர்த்துச் செய்யப்படும் இந்த ரெசிபியை, வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்தே எப்படி சுலபமாகச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3/4 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி, பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை!
முதலில் உருளைக்கிழங்குகளைக் குழாயடித் தண்ணீரில் நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் தோலுடனும் பயன்படுத்தலாம், அல்லது வேகவைத்த பின் தோலை உரித்துக்கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் 3 கப் குளிர்ந்த நீர், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, உருளைக்கிழங்குகளில் ஒரு ஃபோர்க் ஸ்பூனால் ஆங்காங்கே சிறு துளைகள் இட்டு வேகவைக்க வேண்டும்.
மிதமான தீயில், உருளைக்கிழங்கு குழையாமல் முக்கால் பதம் வேகும் வரை கொதிக்க வையுங்கள். வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு முழுமையாக ஆறவிடவும். இப்போது ஒரு அகலமான கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வேகவைத்த உருளைக்கிழங்குகளைப் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுத்துத் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதே கடாயில் மேலும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். அவை வெடித்ததும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அடுப்பை குறைந்த தீயில் வைத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்குங்கள்.
அடுத்ததாக மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். மசாலா வாசம் வந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து மசாலா தொக்கு பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
தக்காளி மசாலா சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும்போது, நாம் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை இதில் சேர்த்து, அரை கப் சுடுநீர் ஊற்றி நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். உப்பு சரியாக உள்ளதா எனப் பார்த்துவிட்டு, கடாயை ஒரு தட்டு கொண்டு மூடி, குறைந்த தீயில் 6 முதல் 7 நிமிடங்கள் வரை தம் போட வேண்டும். இப்படிச் செய்வதால் மசாலாவின் சுவை முழுமையாக உருளைக்கிழங்கிற்குள் இறங்கும்.
தண்ணீர் வற்றி, மசாலா முழுவதும் உருளைக்கிழங்கின் மேல் ஒட்டிக்கொண்டு அட்டகாசமான பதத்திற்கு வந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அசல் ரெஸ்டாரண்ட் சுவையில் நாவில் எச்சில் ஊறவைக்கும் பாம்பே உருளைக்கிழங்கு தயார்.
இன்றே இந்த ரெசிபியை உங்கள் கிச்சனில் முயற்சி செய்து பாருங்கள்.