
இன்றைக்கும் சரித்திர நாடகங்களில் அரசர் மந்திரியைப் பார்த்து, ”மந்திரியாரே! நாட்டில் மும்மாரி பொழிகிறதா?” என்று கேட்டு விட்டே மற்ற விஷயங்களைப் பேச ஆரம்பிப்பார்! இதிலிருந்தே மழையின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.
’மன்னருக்கு மழை பெய்வது கூடத்தெரியாதா?’ என்று கிண்டல் அடிப்பவர்களும் உண்டு. ‘அப்படியல்ல! மன்னரின் ஆட்சியின் கீழ் நாடு பரந்து விரிந்து கிடப்பதால் எல்லா இடத்திலும் வேண்டிய அளவுக்கு மழை பெய்து வருகிறதா?’ என்பதை அறியவே இந்தக் கேள்வி என்று கூறுவாரும் உண்டு. பத்து நாட்களுக்கு ஒருமுறை போதுமான மழைப் பொழிவு இருக்குமேயானால் அந்த நாடு செழித்து வளரும் என்பது இதிலிருந்து பெறப்படுவது.
நமக்கு மழைக்காலமோ இனிமேல்தான். வட கிழக்குப் பருவக் காற்றால் வரும் மழை ஐப்பசி, கார்த்திகை மாதங்களில்தான் அதிகப்படியாகப் பெய்யும். அவ்விரு மாதங்களையுமே அடைமழைக் காலம் என்றழைப்பர். அது கூட முன்பு போல அடை மழையாகப் பெய்வதில்லை. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, தொடர்ந்து பெய்து கொண்டும், தூறிக்கொண்டுமே இருக்கும்.
இப்பொழுது அந்த நிலையெல்லாம் மாறிவிட்டது. எல்லா இடங்களிலும் ஈரம் மற்றும் தூவானம் காரணமாகப் பலருக்கும் சளி பிடித்துக் கொள்ளும். சளியைப் போக்க, மழைக்காலம் வந்து விட்டாலே வீட்டில் அடிக்கடி அம்மா முள் முருங்கை (கல்யாண முருங்கை) அடையையோ, தோசையையோ செய்வார்கள்.
கிராமங்களில் உயிர் வேலி என்ற பெயரில், முள் முருங்கை, கிளுவை, வாகை, ஆமணக்கு, ஆடாதோடை போன்றவற்றால் வேலி அமைப்பார்கள். எங்கள் வீட்டிலும் அவ்வாறு அமைக்கப்பட்ட வேலியில் நிறைய முள் முருங்கை மரங்கள் வளர்ந்திருந்தன.
இந்த அடையோ, தோசையோ செய்வது எளிதானதே! ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்துடன், ரொம்பவும் கொழுந்தாக இல்லாமலும் அதிகம் முற்றிவிடாமலும் உள்ள இலைகளைப் பறித்து வந்து, நன்றாகக் கழுவிவிட்டு தோசைக்கு மாவு அரைப்பதைப்போல் இலைகளையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். தோசை மாவைப்போல் புளிக்க வைக்க வேண்டியது இல்லை. மாவை அரைத்த உடனேயே, தோசைக்கல்லில் கெட்டியான மாவால் அடையாகத் தட்டலாம். மாவுடன் வேண்டிய அளவு நீரைச் சேர்த்து, தோசையாகவும் வார்க்கலாம். அடையோ, தோசையோ இரண்டுமே மாலை டிபனாகச் சாப்பிட ஏற்றவை. தனியாகவே சாப்பிடலாம்.
தேவைப்படுவோர் தக்காளி சட்னி செய்து, அதனுடன் சேர்த்தும் சாப்பிடலாம். சளியை அகற்றித் தெளிவான சுவாசத்துக்கு வழி வகுக்கும்! என்ன ஒன்று! இப்பொழுதெல்லாம் உயிர் வேலிகள் குறைந்துவிட்டதால் முள் முருங்கையைப் பார்ப்பதும் அரிதாகி விட்டது. முள் முருங்கை இலைகள் கிடைக்கும் பகுதியில் உள்ளவர்கள் இதனை ட்ரை செய்து பாருங்கள்!
சளியைப் போக்கி உடலுக்கு வலு சேர்க்கும் இந்த முள் முருங்கை அடை /தோசை! உணவையே மருந்தாக்கி வைத்த முன்னோர்களை நினைவு கூர்வோம்!