
பகவான் சிவபெருமானுக்காகத் தயாரித்துப் படைக்கப் படும் ஒரு சுவையான உணவு திருவாதிரை களி. இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
திருவாதிரை களி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பச்சரிசி 1 கப்
2.பாசிப் பருப்பு 1 டீஸ்பூன்
3.வெல்லம் 2 கப்
4.தண்ணீர் 3 கப்
5.தேங்காய் துருவல் 1 கப்
6.ஏலக்காய் 6
7.முழு முந்திரிப் பருப்பு 20
8.நெய் 2 டேபிள் ஸ்பூன்
9.ஜாதிக்காய் பவுடர் ⅒ டீஸ்பூன்
10.உலர் திராட்சை 25 கிராம்
செய்முறை:
அரிசியை தண்ணீரில் போட்டு நன்கு கழுவி எடுக்கவும். பின் அதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் பரத்தி, நீர்ச்சத்து இல்லாமல் உலர வைக்கவும். உலர்ந்தவுடன் அதனுடன் பாசிப்பருப்பை சேர்க்கவும். ஒரு அடி கனமான வாணலியில் அரிசி பருப்பு கலவையைப் போட்டு, மீடியம் தீயில் நன்கு சிவக்கும் வரை வறுக்கவும். பின் அதை வாணலியிலிருந்து ஒரு தட்டில் கொட்டவும். சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் விட்டு முந்திரிப் பருப்பை பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.
உலர் திராட்சைப் பழங்களையும் நெய்யில் சிவக்க பொரித்தெடுத்துக்கொள்ளவும். ஏலக்காயை தோலுடன் நசுக்கி வைக்கவும்.
பிறகு, முந்திரி ஆறியவுடன் கால், அரை துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். வெல்லத்தை கல்லால் நசுக்கி பொடியாக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு அடிகனமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை ஊற்றி, அதனுடன் வெல்லத்தை சேர்க்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீடியம் தீயில் கொதிக்கவிடவும். வெல்லம் முழுசாக கரைந்ததும் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும். வெல்லக் கரைசலை வடி கட்டியில் வடித்தெடுக்கவும். அதில் கல், மண் இருந்தால் பாத்திரத்தின் அடியிலேயே தங்கிவிடும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பில் ஏற்றவும். சூடானதும், அரைத்து வைத்த அரிசிமாவை போட்டுக்கிளறவும்.
கூடவே தேங்காய் துருவல், வறுத்த முந்திரி, திராட்சை, நசுக்கிய ஏலக்காய், ஜாதிக்காய் பவுடர் மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறவும். சீக்கிரமே கலவை கெட்டியாகிவிடும். அதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
பின், அந்தப் பாத்திரத்தை உள்ளே வைப்பதற்கு ஏற்ற அளவுள்ள ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, களியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, பாத்திரத்தை குக்கருக்குள் வைக்கவும். பின் அடுப்பில் வைத்து, குக்கர் மூடியால் மூடி விசில் போடவும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சுவையான திருவாதிரை களி தயார்.