
-கல்பனா ராஜகோபால்
ரசங்கள் பலவிதம் அது ஒவ்வொன்றும் ஒரு சுவை இருக்கும் இதோ சில ரச வகைகள் இன்றைய அவசர யுகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எளிதான முறையில் ரசம் தயாரிப்பதற்கான பொடி வகைகள்.
துவரை ரசப்பொடி
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு 250 கிராம்
பாசிப்பருப்பு இரண்டு ஸ்பூன்
சீரகம் 50 கிராம்
மிளகு 50 கிராம்
கொத்தமல்லி விதைகள் 100 கிராம்
பூண்டு உரித்தது 15 பல்
கறிவேப்பிலை ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் 15
கல் உப்பு 50 கிராம்
பெருங்காயம் தேவையான அளவு
பருப்புகளை தண்ணீரில் கழுவி நன்கு உலர்த்தி வைத்துக் கொள்ளவும் அடுப்பில் கடாயை வைத்து முதலில் பருப்புகளை தனித்தனியாக என்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பிறகு சீரகம் மிளகு ஆகியவற்றைத் தனி தனியாக நன்றாக வறுத்து எடுக்கவும்.
காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து எடுத்துவிட்டு பூண்டினை பொடிப் பொடியாக நறுக்கி கடாயில் போட்டு சிறு தீயில் வறுத்து எடுக்கவும்.
வறுத்த அனைத்துப் பொருட்களையும் ஒரு தட்டில் ஆறவைத்து இறுதியில் கல் உப்பையும் நன்கு வறுத்து எடுத்து ஆறிய பின் மிக்ஸில் பூண்டு தவிர மற்ற பொருட்களை போட்டு ஒரு நிமிடம் சுற்றி விட்டு பிறகு பூண்டு சேர்த்து நன்கு கலந்து பொடித்துக் கொள்ளவும் இறுதியில் பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அதனை ஒரு காற்றுப் புகா ஜாரில் நிரப்பி சேமித்து வைத்துக் கொள்ளலாம். சுவையான துவரம் பருப்பு ரசப்பொடி ரெடி.
பச்சைப் பயறு ரசப்பொடி
தேவையான பொருட்கள்:
பச்சைப் பயறு 200 கிராம்
துவரம் பருப்பு 50 கிராம்
பாசிப்பருப்பு 2 ஸ்பூன்
சீரகம் 50 கிராம்
மிளகு 50 கிராம்
கொத்தமல்லி விதைகள் 100 கிராம்
பூண்டு உரித்தது 15 பல்
கறிவேப்பிலை ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் 15
கல் உப்பு 50 கிராம்
மஞ்சள் தூள் 50 கிராம்
பெருங்காயம் சிறிய கட்டி.
சீரகம் மிளகு ஆகியவற்றைத் தனித் தனியாக நன்றாக வறுத்து எடுக்கவும். காய்ந்த மிளகாயை சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து எடுத்த பின் நீரில் அலசி உலர்த்திய கறிவேப்பிலையை போட்டு மொரு மொரு என ஆகும் வரை வறுத்து ஒரு தட்டில் ஆறவைத்து கல் உப்பை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸில் பூண்டு தவிர மற்ற பொருட்களை போட்டு ஒரு நிமிடம் சுற்றிவிட்டு பிறகு பூண்டு சேர்த்து நன்கு கலந்து பொடித்துக் கொள்ளவும் இறுதியில் பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும் அதனை ஒரு காற்றுப் புகா ஜாரில் நிரப்பி சேமித்து வைத்துக்கொள்ளலாம் சுவை மணம் மிக்க பச்சைப் பயறு ரசப் பொடி தயார்
கொள்ளுப்பயறு ரசப்பொடி
தேவையான பொருட்கள்:
கொள்ளுப் பயறு 200 கிராம்
துவரம் பருப்பு 50 கிராம்
பாசிப்பருப்பு 2 ஸ்பூன்
சீரகம் 50 கிராம்
மிளகு 50 கிராம்
கொத்தமல்லி விதைகள் 100 கிராம்
பூண்டு உரித்தது 15 பல்
கறிவேப்பிலை ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் வற்றல் 15
கல் உப்பு 50 கிராம்
பெருங்காயம் சிறிய கட்டி.
பருப்புகளை தண்ணீரில் கழுவி நன்கு உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சீரகம் மிளகு ஆகியவற்றைத் தனி தனியாக நன்றாக வறுத்து எடுக்கவும். காய்ந்த மிளகாயை சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து எடுத்த பின் நீரில் அலசி உலர்த்திய கறிவேப்பிலையை போட்டு மொரு மொரு என ஆகும் வரை வறுத்து விட்டு கல் உப்பையும் போட்டு வறுத்து ஒரு தட்டில் ஆறவைத்து ஆறிய பின் மிக்ஸில் பூண்டு தவிர மற்ற பொருட்களை போட்டு ஒரு நிமிடம் சுற்றி விட்டு பிறகு பூண்டு சேர்த்து நன்கு கலந்து பொடித்துக் கொள்ளவும் இறுதியில் பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அதனை ஒரு காற்றுப் புகா ஜாரில் நிரப்பி சேமித்து வைத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்கும் சுவையான கொள்ளுப் பயறு ரசப்பொடி தயார். இதனை சூப் ஆகவும் செய்து பரிமாறலாம்.
மேற்கண்ட ரசப்பொடிகளில் புளி சேர்க்கப்படவில்லை. தேவைப்படுவோர் பொடியை சிறிது நீரில் அலசி நன்கு தண்ணீர் வடிய காயவைத்து வறுத்து இதனுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்
ரசம் வைக்கும்போது இரண்டு தக்காளிகளை நன்கு வேகவைத்து மசித்த பின் அதனுடன் இந்த ரசப் பொடியை இரண்டு ஸ்பூன் கலந்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து வைத்துள்ள ரசத்தை ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து உப்பு சரிபார்த்து நன்கு கொதிக்கவிடவும் இறக்கி வைக்கும்போது கொத்து மல்லி தழை தூவி பரிமாறவும்.