ஞாயிறு ஸ்பெஷல்: நாவில் எச்சில் ஊறும் வெஜ் செட்டிநாடு பிரியாணி செய்வது எப்படி?

ரெடிமேட் மசாலாக்கள் இல்லாமல், வீட்டிலேயே அரைத்த புதிய மசாலாக்களுடன் கமகமக்கும் சுவையான சைவ செட்டிநாடு பிரியாணி மிகச் சுலபமாக எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுங்கள்!
veg chettinad biryani செட்டிநாடு பிரியாணி
veg chettinad biryani செட்டிநாடு பிரியாணி
Updated on

காரசாரமான சுவைக்கும், கமகமக்கும் மசாலா வாசனைக்கும் உலக அளவில் பெயர் போனது செட்டிநாடு சமையல். பொதுவாக செட்டிநாடு என்றாலே அசைவ உணவுகள்தான் பலருக்கும் சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால், அசைவ பிரியர்களைத் தாண்டி சைவ பிரியர்களும் கொண்டாடும் ஒரு அற்புதமான உணவுதான் இந்த செட்டிநாடு பிரியாணி. 

இதில் புதிதாக வறுத்து அரைக்கப்படும் மசாலாக்களின் கலவை, காய்கறிகளோடு ஒன்றிணைந்து பிரியாணிக்கு ஒரு தனித்துவமான மற்றும் பாரம்பரியமான சுவையைக் கொடுக்கிறது. ஆரோக்கியமான முறையில் வீட்லேயே அரைத்த மசாலாவைக் கொண்டு மணக்க மணக்க வெஜிடேரியன் பிரியாணியை எப்படிச் செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி - 1.5 கப்

  • நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி) - 1.5 கப்

  • பெரிய வெங்காயம் - 2

  • தக்காளி - 2 

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

  • புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி

  • கெட்டித் தயிர் - 3 டேபிள் ஸ்பூன்

  • நெய் மற்றும் சமையல் எண்ணெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:

  • சீரகம் - 1 டீஸ்பூன்

  • சோம்பு  - 1 டீஸ்பூன்

  • மிளகு - 1/2 டீஸ்பூன்

  • பட்டை - 1 சிறிய துண்டு

  • கிராம்பு - 3

  • ஏலக்காய் - 2

  • காய்ந்த மிளகாய் - 4

  • கல்பாசி - ஒரு சிறிய துண்டு

  • துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

veg chettinad biryani செட்டிநாடு பிரியாணி
veg chettinad biryani செட்டிநாடு பிரியாணி

செய்முறை! 

முதலில் அரைக்கக் கொடுத்துள்ள மசாலாப் பொருட்களை ஒரு அடிகனமான வெறும் கடாயில் வாசனை வரும் வரை மிதமான தீயில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மிக நைஸான விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

இதுதான் பிரியாணிக்கு அசல் சுவையைத் தரப்போகிறது. இப்போது பாஸ்மதி அரிசியை இரண்டு முறை நன்றாகக் கழுவி 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் ஒரு பிரஷர் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றவும். நெய் உருகியதும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நல்ல பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துப் பச்சை வாசனை முழுமையாகப் போகும் வரை வதக்குங்கள்.

இதையும் படியுங்கள்:
10 நிமிஷத்துல லஞ்ச் ரெடி… இந்த கொங்குநாடு பருப்பு குழம்பு செஞ்சா சட்டி காலி! 
veg chettinad biryani செட்டிநாடு பிரியாணி

அடுத்ததாக நறுக்கிய தக்காளி மற்றும் நாம் தயார் செய்து வைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதக்கிய காய்கறிகளுடன் நாம் அரைத்து வைத்துள்ள புதிய மசாலாவைச் சேர்க்கும்போது, அசல் செட்டிநாடு பிரியாணி வாசம் வீடு முழுவதும் கமகமக்கும். மசாலாவின் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும்போது, தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். 

1.5 கப் பாஸ்மதி அரிசிக்குச் சரியாக 2.25 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் தண்ணீர் இல்லாமல் அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் சரியாக 2 விசில் விட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

குக்கரின் விசில் முழுமையாக அடங்கியதும் மூடியைத் திறந்தால், ஆவி பறக்க உதிரி உதிரியான, காரசாரமான காய்கறி பிரியாணி தயார். மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கரண்டியின் காம்பால் அரிசி உடையாமல் மிக மெதுவாகக் கிளறி விட்டுப் பரிமாறுங்கள். இதற்குத் தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயத் தயிர்ப்பச்சடியும், அப்பளமும் மட்டுமே போதுமானது. 

இதையும் படியுங்கள்:
வயிறு சூட்டைத் தணிக்கும் சூப்பர் ரெசிபி... சத்துகள் நிறைந்த 'குலித் கலான்' செய்வது இவ்வளவு சுலபமா?
veg chettinad biryani செட்டிநாடு பிரியாணி

ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்கு உங்கள் குடும்பத்தினருக்கு இந்த செட்டிநாடு பிரியாணி செய்து கொடுத்துப் பாருங்கள், தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாமல் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com