

kulith kollu kalan recipe: கோடைக்காலம் வந்துவிட்டாலே நாம் தேடும் உணவுகள் அனைத்தும் உடலுக்குக் குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். வழக்கமாக மோர்க்குழம்பு அல்லது தயிர் சாதம் சாப்பிட்டு சலித்துப் போனவர்களுக்கு ஒரு அருமையான மாற்றுதான் இந்த 'குலித் கலான்'.
'குலித்' எனப்படும் கொள்ளு பொதுவாக உடலுக்குச் சூட்டைத் தரக்கூடியது என்றாலும், அதை நன்கு வேகவைத்துத் தேங்காய் மற்றும் புளிப்பான மோருடன் சேர்த்து 'கலான்' எனப்படும் கேரளா ஸ்டைல் மோர்க்குழம்பு முறையில் சமைக்கும்போது, அது வயிறு புண்ணை ஆற்றி, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும் அருமையான கோடைக்கால உணவாக மாறிவிடுகிறது. இதை எப்படிச் சுலபமாகச் செய்வது என்று இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1/4 கப்
லேசான புளிப்புள்ள கெட்டித் தயிர் அல்லது மோர் - 1.5 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு, வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை!
முதலில் கால் கப் கொள்ளை வெறும் கடாயில் வாசம் வரும் வரை லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். வறுத்த கொள்ளை நன்றாகக் கழுவி, குக்கரில் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குறைந்தது 6 முதல் 7 விசில் வரை விட்டு மென்மையாக வேகவைக்க வேண்டும்.
வெந்த கொள்ளை ஆறியதும் ஒரு கரண்டியால் அல்லது மிக்ஸியில் போட்டு லேசாக மசித்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் குழம்பு சற்று தடிமனாகவும், சுவையாகவும் இருக்கும்.
கலான் குழம்பின் அசல் சுவையே தேங்காய் மசாலாவில்தான் இருக்கிறது. ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நல்ல நைஸான விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு மண்சட்டி அல்லது அடிகனமான பாத்திரத்தில், மசித்து வைத்துள்ள கொள்ளு, அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில் வையுங்கள். மிதமான தீயில் தேங்காயின் பச்சை வாசனை போகும் வரை சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
குழம்பு கொதித்து பச்சை வாசனை போனதும் அடுப்பை முற்றிலும் அணைத்துவிடுங்கள். குழம்பு சற்று ஆறியதும், நாம் கடைந்து வைத்துள்ள தயிர் அல்லது மோரை இதில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலந்து விடுங்கள். தயிர் சேர்த்த பிறகு குழம்பை ஒருபோதும் கொதிக்க வைக்கக் கூடாது; கொதிக்க வைத்தால் திரிந்துவிடும்.
இறுதியாக ஒரு தாளிப்புக் கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டினால் கமகமக்கும் குலித் கலான் தயார்.
சுடச்சுட சாதத்தில் இந்தக் கலானை ஊற்றி, தொட்டுக்கொள்ள ஒரு காரசாரமான உருளைக்கிழங்கு வறுவலோ அல்லது ஊறுகாயோ வைத்துச் சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். தேங்காய் எண்ணெயின் மணமும், மோரின் புளிப்பும் உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியைத் தரும்.
இந்த கோடைகாலத்தில் உடல் சூட்டைத் தணித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த அருமையான ரெசிபியை நீங்களும் நிச்சயம் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.